பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இம்மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து வருகின்றனர். கோடை உழவிற்கு பின் தக்கைபூண்டு, சணப்பை போன்ற பசுந்தாள் உர பயிர்களை வயலில் விதைக்கலாம். இவை மண்ணில் உள்ள போதுமான ஈரப்பதத்தில் வளரும்.

பசுந்தாள் உர பயிர் 45-வது நாள் பயிராக உள்ள போது (பூப்பதற்கு முன்பாக) அதனை தரையோடு அறுத்து வயலின் ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும். பின் பருத்தி அல்லது மக்காச்சோள பயிருக்கு தகுந்தவாறு பார் பிடித்து வயலை தயார் செய்ய வேண்டும். பின்னர், விதை விதைக்கும் போது பாரில் அறுத்து வைத்துள்ள பசுந்தாள் உர பயிரை படத்தில் காட்டியவாறு மூடாக்காக இட வேண்டும்.

இவ்வாறு பாரில் மூடாக்கு இடுவதால் களைகள் வளருவது தடுக்கப்படுகின்றது. எந்தவொரு பயிருக்கும் அதன் வாழ்நாளில் முதல் மூன்றில் ஒரு பங்கு நாட்களில் களைகள் இன்றி பராமரித்தால் நல்ல விளைச்சல் பெறலாம்.

உதாரணமாக மக்காச்சோள பயிர் என்றால் முதல் 30 நாட்களும், பருத்தி பயிர் என்றால் முதல் 45-50 நாட்களும் களைகள் இன்றி பராமரிக்கப்பட வேண்டும். மூடாக்கு இடுவதால் முதலாவதாக களைகள் வளர்வதை தடுக்கலாம். இரண்டாவதாக களைக்கொல்லி அல்லது களை எடுப்பதற்கான செலவையும் குறைக்கலாம். மூன்றாவதாக இடப்பட்ட மூடாக்கு பின்னர் மக்கி மண்ணுக்கும், பயிருக்கும் உரமாகும்.

இதனால உர செலவையும் குறைக்கலாம். நான்காவதாக பயிர் மூடாக்கு இடுவதால் மழைநீரையும் ஓரளவு சேமிக்க முடியும். வைக்கோல் தாராளமாக இருக்கும்பட்சத்தில் விவசாயிகள் வைக்கோலையும் மூடாக்கிற்கு பயன்படுத்தலாம்.

மூடாக்கிற்கு சென்ற ஆண்டு பயிர் செய்த பருத்தி அல்லது மக்காச்சோள பயிர்களின் அறுவடைக்குப்பின் எஞ்சிய பகுதிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் சென்ற ஆண்டு பயிரை தாக்கிய பூச்சி மற்றும் நோய்களின் காரணிகள் அவற்றில் இருக்கும். அவற்றை பயன்படுத்துவதனால் மீண்டும் இம்முறை அத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, விவசாயிகள் எதிர்வரும் பயிர் பருவத்தில் பசுந்தாள் உர மூடாக்கிற்கு இப்போதே தயாரானால் களை கட்டுப்பாடு, உர நிர்வாகம், மழைநீர் சேமிப்பு ஆகிய பயன்களை பெறலாம், என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!