DMK, SDPI, VCK and MMK arrested in Ramanathapuram picket

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராம்ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் ராம்ராஜ்ய ரதயாத்திரைக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் அமலியில் ஈடுபட்டதை தொடர்ந்து தலைமை செயலகம் முன்பாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்எல்ஏக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஸ்டாலின் உட்பட தி.மு.க.,வினர் பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேபால் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா உட்பட பல தலைவர்கள் ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

இச்செயல்களை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திமுக மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமையில் நகர் செயலாளர் கார்மேகம், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இன்பா ரகு, இலக்கிய அணி கிருபானந்தம், முன்னாள் டி.ஆர்.ஓ.,குணசேகரன் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டு தமிழக மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போலீசார் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

இதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அஸ்கர்அலி, மேற்கு மாவட்ட செயலாளர் செய்யது இபுராகிம், மாவட்ட துணை தலைவர் அப்துல்வகாப், விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் கிட்டு, திருவாடானை சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பழனி உட்பட 150க்கும் மேற்பட்டோர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்டனர். போலீசார் இவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!