In Tamilnadu not only in summer, There will always be no power cut Minister Thangamani Confirmed

நாமக்கல் : தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மட்டும் அல்லாமல் எப்பொழுதுமே இனி மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மண்டல அளவிலான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட 5 மின் விநியோக வட்டங்கள், 20 இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்டங்கள், 81 இயக்குதல் மற்றும் பராமரித்தல் துணை கோட்டங்கள், 350 இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவுகளில் புதியதாக வழங்கப்பட்ட குறைந்தழுத்த, உயரழுத்த மின் இணைப்புகள் குறித்தும், தேவைப்படும் மின்சாதனங்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, மின் பயன்பாட்டாளர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்து பேசியதாவது:

கடந்த மூன்றாண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது என்பதை விட மின்மிகை மாநிலமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்துள்ளார். இதனை நாம் தொடர்ந்து இதே நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த மின் சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் பொதுமக்கள் 5 நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டால் கூட உடனடியாக அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் தெரிவிக்கும் அளவிற்கு மக்கள் விழிப்புணர்வாக இருக்கின்றார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து 8 மணி நேரம், 5 மணி நேரம் கூட மின்வெட்டு ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் இந்த அரசு மூன்றாண்டுகளாகமாக மின் வெட்டு இல்லாத நிலையினை உருவாக்கியுள்ள து.

மேலும் தற்போது ஏதாவதொரு பகுதியில் மழை காரணமாகவோ, மரங்கள் விழுவதாலோ மின்வெட்டு ஏற்பட்டால் கூட உடனே மக்கள் மின்வெட்டு எனக்கூறி இலவச தொலைபேசி எண்ணான 1912 அழைக்கின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 951 உயர்மின்னழுத்த இணைப்புகளும், 31 லட்சத்து 23 ஆயிரத்து 693 குறைந்த மின்னழுத்த இணைப்புகளும் உள்ளன, மேலும் ஆண்டு ஒன்றிக்கு 96 ஆயிரம் குறைந்த மின்னழுத்த புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 400-230 கி.வோ துணைமின் நிலையம் ஒன்றும், 230-110 கி.வோ துணை மின் நிலையங்கள் 12-ம், 110-22 கி.வோ துணை நிலையங்கள் 70 ம், 110-11 கி.வோ துணை மின் நிலையங்கள் 33 ம், 33-11 கி.வோ துணை மின் நிலையங்கள் 18-ம் இயங்கி வருகின்றன.

ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 33 கி.வோ உயரழுத்த மின்பாதைகள் 214 கி.மீ நீளத்திற்கும், 22 கி.வோ உயரழுத்த மின்பாதைகள் 12 ஆயிரத்து 411 கி.மீ நீளத்திற்கும், 11 கி.வோ உயரழுத்த மின்பாதைகள் 5 ஆயிரத்து 628 கி.மீ நீளத்திற்கும், குறைந்த அழுத்த மின்கம்பிகள் 80 ஆயிரத்து 667 கி.மீ நீளத்திற்கும் அமைக்கப்பட்டு மின் விநியோக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் 34 ஆயிரத்து 975 விநியோக மின்மாற்றிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோக பணிகள் குறித்த புகார்களை தொpவிப்பதற்காக பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்ட வாட்ஸ் அப் உதவி எண்ணின் மூலமாக கடந்த 171 நாட்களில் ஆயிரத்து 850 புகார்கள் பெறப்பட்டு தீர்வு வழங்கப்பட்டுள்ளன.

மின்கட்டணத்தை எளிதாக செல்போன் மூலம் செலுத்துவதற்காக மின்வாரிய ஆப்ளிகேசன் வசதி செய்யப்பட்டதன் அடிப்படையில் ஈரோடு மண்டல பகுதியில் மட்டும் 8 ஆயிரத்து 267 மின்பயனீட்டாளர்கள் ரூ.41 லட்சத்து 34 ஆயித்து 500 மின்கட்டணத்தை எளிதாக இருக்குமிடத்திலிருந்தே செலுத்தியுள்ளார்கள்.

விவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்காக விரைவாக மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின் கீழ் இதுவரை ஈரோடு மண்டலத்தில் ஆயிரத்து 737 மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2 ஆயிரத்து 449 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விவசாய பம்ப்செட்களுக்காக 2017-18 ம் ஆண்டில் மட்டும் பதிவு வரிசை முன்னுரிமை அடிப்படையில் 2 ஆயிரத்து 995 மின் இணைப்புகளும், சுய நிதித்திட்டங்களின் கீழ் ஆயிரத்து 115 மின் இணைப்புகளும், அரசு திட்டங்களின் கீழ் 32 மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 291 மின் இணைப்புகளும் சேர்த்து மொத்தம் 6 ஆயிரத்து 433 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மட்டும் அல்லாமல் எப்பொழுதுமே இனி மின்வெட்டு இருக்காது. ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கடந்த 01.07.2017 முதல் இன்று வரை 3 இலட்சம் மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தின் கீழ் 10ஆயிரம் மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன என பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஹெலன், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக இயக்குநர் செந்தில்வேலன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!