“Life-saving, which is an unacceptable waste of any milk”: milk agents association

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:

முன்னணி நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் எனும் பெயரில் பாலினை வீணாக்குவதை தடுக்கும் நோக்கிலும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்திகளை ஆக்கபூர்வமான செயல்களை செய்திட பணித்திடவும் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து அதற்கான முன்னெடுப்புகளை “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் முன்னெடுக்கத் தொடங்கினோம்.

ஏனெனில் எந்த ஒரு பொதுநலன் சார்ந்த எந்த ஒரு விசயங்களும் முதலில் சுயநலத்தில் இருந்து தான் துவங்கும். அந்த வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் பால் முகவர்கள் பட்ட சிரமங்களையும், முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்த போது தவறி மேலிருந்து கீழே விழுந்து உயிரிழப்புகள் வரை சென்ற நிகழ்வுகளையும் பார்த்த போது இதனை பொதுநலன் சார்ந்த விவகாரமாக ஏன் முன்னெடுக்கக் கூடாது என்கிற சிந்தனையே மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காரணமாக அமைந்தது.

எங்களது முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எங்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேரவே வந்தன. குறிப்பாக “கடவுளர்களின் சிலைகளுக்கு தினமும் பாலாபிஷேகம் செய்வதை உங்களால் தடுக்க முடியுமா? போராட்டம் என்கிற பெயரில் சாலைகளில் பாலினை கொட்டி நீங்களே போராடுவது சரியா?” என்றெல்லாம் கேள்விக்கணைகள் எழுந்தன. இன்னும் எழுந்து கொண்டே இருக்கின்றன.

கடவுளர்களின் சிலைகளுக்கு தினமும் பாலாபிஷேகம் செய்வது என்பது “அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கை”. அந்த “மதம் சார்ந்த நம்பிக்கையில் நாங்கள் மட்டுமல்ல எவருக்கும் தலையிட உரிமை கிடையாது”. ஆனால் தனிமனித வழிபாடுகளை ஊக்குவிக்கும் வகையில் உயிரற்ற கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் என்கிற பெயரில் பாலை வீணடிப்பதும், அந்த கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது கீழே விழுந்து ஏற்படும் விபத்தில் உயிரிழப்புகள் வரை போவதையும் எப்படி கண்டும் காணாமல் இருப்பது?

அதுமட்டுமன்றி ரசிகர்கள் என்கிற மாபெரும் சக்தியை பெரும்பாலான முன்னணி நடிகர்கள் தங்களின் சுவரொட்டிகள் ஒட்டவும், தங்களுக்கு வாழ்க, ஒழிக கோஷம் போடுபவர்களாகவும் மட்டுமே ஆக்கி வைத்திருக்கிறார்கள். கேட்டால் நான் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டேன். எனக்கு ரசிகர் மன்றமே கிடையாது என்பார்கள். ஆனால் அவர்கள் மனது வைத்தால் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்திகள் மூலம் ஆக்கபூர்வமான செயல்களை செய்திட வைத்து நமது நாட்டில் ஒரு அமைதிப் புரட்சியையே நடத்திட முடியும் என்பதை அவர்கள் நம்பினார்களோ இல்லையோ நாங்கள் நம்பினோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முன்னணி நடிகர்களிடம் எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்றோம்.

சரி போராட்டம் என்கிற பெயரில் சாலைகளில் பாலினை கொட்டி நீங்கள் மட்டும் போராடுவது சரியா? என வினாக்கள் நாலாபுறமும் இருந்து வந்து எங்கள் மீது அம்புகளாய் தெறித்து விழுந்தன. இன்னும் வந்து விழுந்து தைத்துக் கொண்டிருக்கின்றன.

முதலில் நீங்கள் அனைவரும் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பால் முகவர்கள் என்பவர்கள் மழை, வெள்ளம் உள்ளிட்ட எந்த ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ந்தாலும் அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து பாக்கெட் பாலினை வாங்கி அதனை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்பவர்கள். பால் உற்பத்தியாளர்கள் என்பவர்கள் மாடுகளை வளர்த்து அதன் மூலம் பாலினை உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்கள். இந்த வித்தியாசத்தை அனைவரும் நன்றாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

“அவர்கள் வேறு, நாங்கள் வேறு, அவர்களுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என “பொறுப்புகளை தட்டிக் கழிக்க நாங்கள் விரும்பவில்லை”. பெரும்பாலும் தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலினை வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் எவரும் இது போன்ற போராட்டங்களை முன்னெடுப்பதில்லை. ஏனெனில் பாலுக்கான கொள்முதல் விலையை குறைவாக வழங்கினாலும் கூட எந்த நேரத்திலும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தனியார் பால் நிறுவனங்கள் பாலினை கொள்முதல் செய்ய மறுப்பதில்லை.

ஆனால் ஆவின் நிறுவனத்திற்கு பாலினை வழங்கும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலினை கொள்முதல் செய்யும் ஆவின் கூட்டுறவு அமைப்பில் இருக்கும் சில அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான முடிவுகளை மேற்கொண்டு அதன் மூலம் ஆதாயம் அடைகின்ற விதமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலினை கொள்முதல் செய்ய மறுக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதுண்டு. அப்படி பாலினை கொள்முதல் செய்ய மறுப்பதாலும், பாலின் தரத்தினை குறைத்து மதிப்பிட்டு பாலுக்கான கொள்முதல் விலையை குறைவாக நிர்ணயம் செய்வதாலும் வேறு வழியின்றி அந்த போராட்டத்திற்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

ஏனெனில் “மாட்டின் மடியில் இருந்து பாலினை கறந்த 6மணி நேரத்திற்குள் கறந்த அந்தப் பாலினை முறையாக பதப்படுத்தியாக வேண்டும்”. இல்லையெனில் அந்தப் பாலில் நுண்கிருமிகள் வளரத் தொடங்கி விடும். முறையாக பதப்படுத்தாத பாலினை பொதுமக்கள் அருந்தினால் வயிற்றுப் போக்கு ஏற்படும். பல்வேறு உடல் உபாதைகளும் வரக்கூடும். அதுமட்டுமன்றி அந்த பாலும் கெடத் தொடங்கி விடும். அதற்காக அந்த போராட்டங்களை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை.

“அரசின் கவனத்தை ஈர்க்க சாலைகளில் பாலினை கொட்டித் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்பதில்லை”. எந்த கூட்டுறவு அமைப்பில் பாலினை கொள்முதல் செய்ய மறுக்கிறார்களோ “அந்த கூட்டுறவு அமைப்பின் முன் அமர்ந்து பொதுமக்களுக்கு பாலினை இலவசமாக வழங்குங்கள்”, அந்த “கூட்டுறவு அமைப்பிற்கு பாலினை வழங்காமல் முற்றிலுமாக புறக்கணிப்பு செய்யுங்கள்” என பால் உற்பத்தியாளர்களையும், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களையும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு தான் இருக்கிறோம். உயிர் காக்கும் அத்தியாவசிய பொருளான பாலினை சாலைகளில் கொட்டி போராட்டம் நடத்துவோரை எங்களது சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே வன்மையாக கண்டித்தும், எதிர்த்தும் வந்திருக்கிறோம்.

எனவே கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை மட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை. போராட்டம் என்கிற பெயரில் பாலினை வீணடிப்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து கண்டித்தும், எதிர்த்தும் வந்திருக்கிறது என்பதை இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த நேரத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி மனு அளித்தும் ரஜினி அவர்கள் வாய் திறக்காத காரணத்தால் இது ஒரு நடிகர் சம்பந்தப்பட்ட விசயம் அல்ல என்பதால் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து மனுக் கொடுக்க முடிவு செய்து அதன்படி 19.07.2016அன்று நடிகர் சங்க அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுவை கொடுத்ததும், எங்களது சங்கத்தின் கோரிக்கைகள் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முன் வைத்து விவாதிக்கப்பட்டு அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் அதன் நகலினை அனுப்பிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களது கோரிக்கைகளை கேள்விப்பட்ட தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது “ஜனதா கேரேஜ்” பட வெளியீட்டின் போது “தனது கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக்கூடாது” என அன்புக்கட்டளையிட்ட செய்தி கிடைத்ததும் நாங்கள் அவருக்கு அப்போதே நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இனியாவது முன்னணி நடிகர்கள் அனைவரும் தமிழக ரசிகர்களை வெறும் விட்டில் பூச்சிகளாக நினைக்காமல் அணுக்கதிரைப் போல ரசிகர்களை ஆக்கபூர்வமான செயல்களை செய்திட மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!