Namakkal Government Teacher Training Institute is the student admission stopped this year

நாமக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வருகிற கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்ட மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் உள்பட 20 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வருகிற கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கையை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2 ஆண்டு ஆசிரியர் டிப்ளமோ பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதில் முதலாம் ஆண்டில் 100 மாணவ, மாணவிகள் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வு முறை அமலுக்கு வந்த பிறகு இங்கு மாணவர் சேர்க்கை குறைந்து 20 முதல் 30 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நாமக்கல் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இனிவரும் காலங்களில் ஆசிரியர் டிப்ளமோ பயிற்சியில் சேர ஈரோடுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பெரியசாமி கூறியது: நாமக்கல் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வரும் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை நிறுத்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது. ஆனால், தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து இங்கேயே படிக்கலாம் என்றார்.

இனி வரும் காலங்களில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பணியிடை பயிற்சி அளிக்கும் மையமாகச் செயல்பட இருப்பதாக விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 16 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்ந்தனர் என்பதும், இங்கு ஒரு முதல்வர், 14 விரிவுரையாளர்கள், 7 மூத்த விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!