New organization to protect the interests of lorry owners: Sella.Rasamani interview

file

லாரி உரிமையாளர்களின் நலனை காக்க தமிழகத்தில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி:

சுங்கச்சாவடிகளில் மணிக்கணக்கில் காத்திருப்பதை தவிர்ப்பத்தற்காக தினசரி லாரிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாக முன்பணமாக செலுத்தி விடுகிறோம். சங்கச்சாவடிகள் முழுவதும் அகற்றப்பட வேண்டும்.

டீசல் விலைய தினசரி நிர்ணயிப்பதற்கு பதிலாக, 3 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்.

3 ஆம் நபர் காப்பீட்டு கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்ற மூன்று பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி இரவு எந்த சூழலில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

சுங்கக் கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை மறந்துவிட்டு, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையி்ல் 6 மாத காலத்தில் குழு அமைத்து சுங்கச்சாவடிகளில் லாரிகள் இடையூறு இல்லாமல் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவித்துள்ளதாக அறிகிறோம்.

டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியாது என தெரிவித்துவிட்டனர். விலை நிர்ணயம் 3 மாதங்களுக்கு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. 3 ஆம் நபர் காப்பீட்டு கட்டணம் மட்டும் ஆண்டுக்கு 20 சதவீதமாக உயர்த்துவதில் இருந்து 15 ஆக குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி உரி்மையாளர் சங்க பிரதிநிதிகள், இந்த முறை அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதாக உறுதி அளித்தால் தான் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என்று கூறினர். ஆனால் எந்த நிபந்தனையும் இல்லாமல், எந்த கோரிக்கையும் ஏற்கப்படாத நிலையில் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.

8 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அரசுக்கு சுமார் ரூ.30,000 கோடி வருவாய் இழப்பையும், லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.500 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்குமா அல்லது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த சங்கங்கள் பொறுப்பேற்குமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இனியும் இந்த சங்கங்கள் தலைமையி்ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். இதனால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதல்கட்டமாக தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் நலனுக்கென்று ஒரு புதிய அமைப்பை உருவாக்க, அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!