labbaikudikaduபெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்ய வலியுறுத்தி லப்பைக்குடிகாட்டில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக், இவரது மனைவி நஜிபூநிஷா(48). கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று உயிரிழந்தார்.

இறந்த பெண் நஜிபூநிஷாவின் உடலை இஸ்லாமியர்கள் அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்ய இன்று காலை உடலை முகமதுரபீக் உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது நஜிபூநிஷாவின் உடலை இங்கு அடக்கம் செய்ய கூடாது, மகன் திருமணத்தின் போது ஜமாத் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவில்லை என லப்பைக்குடிக்காடு கிழக்கு ஜமாத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து முகமதுரபீக் உறவினர்கள் சிலருடன் மேற்கு ஜமாத்திற்கும் சென்று தனது மனைவியின் சடலத்தை உங்கள் பகுதியிலுள்ளஅடக்க ஸ்தலத்தில் அடக்கம்
செய்து கொள்ள ஒப்புதல் கேட்டுள்ளார். அதற்கு கிழக்கு ஜமாத்தாரின் அனுமதியின்றி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று கூறியதாக
தெரிகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்று, மனைவியை இழந்த சோகத்தில் இருந்த முகமதுரபீக் அவரது மனைவி நஜிபூநிஷாவின் உடலை ஜமாலியா நகரில் உள்ள அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றார். இதனையறிந்த கிழக்கு ஜமாத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய கூடாது என அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ஒரு தரப்பினர் முகமதுரபீக்கிற்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நஜிபூநிஷாவின் உடல் ஜமாலியா நகரில் உள்ள அவர்களது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜமாலிய நகர் குடியிருப்பு பகுதியாக இருப்பதால் இறந்தவரின் உடலை இப்பகுதியில் அடக்கம் செய்ய கூடாது என்றும், அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி லப்பைக்குடிக்காடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அரசுப்பேருந்தை சிறைபிடித்து கிழக்கு ஜமாத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத் தகவலை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுனர். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

நஜிபூநிஷாவின் உடல் அவரது சொந்த இடத்திலேயே அடக்கம் செய்ததற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்ததால் அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கும், அடக்கம் செய்த உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்திட வலியுறுத்தியும் நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!