Periyar Statue Damage: Thaparathur phenomenon emerges if phenomenon continues! Vaiko Warning

தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றிய தொண்டின் பலனை தன் காலத்திலேயே கண்டவர். பெரியார் இயக்கம் வித்திட்ட சமூக புரட்சியின் தாக்கம், வடபுலம் வரையிலும் எதிரொலித்ததை மறுக்க முடியாது. சாதி, மத பேதங்களை அகற்றி, மூட நம்பிக்கை ஒழிந்த சமூக மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர். தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம் இவையெல்லாம் பெரியாரின் 95 வயது வரை சலியாத உழைப்பால் இந்த மண்ணில் விளைந்தவை.

வட ஆரிய பண்பாட்டுத் திணிப்பு, வடமொழி, இந்தி ஆதிக்கம், அரசியலில் டெல்லி எதேச்சதிகாரம் போன்றவற்றைக் கடுமையாக எதிர்த்த தலைவர் தந்தை பெரியார். அவர் எவரிடமும் தனிப்பட்ட பகைமைப் பாராட்டியதில்லை என்பதற்கு மூதறிஞர் இராஜாஜியுடன் கொண்டிருந்த நட்பு எடுத்துக்காட்டு ஆகும்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சிக்கு அரணாக விளங்கியவர் பெரியார் என்பதும், பொதுஉடைமை இயக்கம் அடக்குமுறைகளைச் சந்தித்தபோது வெகுண்டெழுந்தவர் என்பதும் வரலாற்றின் பக்கங்களில் அழிக்க முடியாதவை.

அண்ணல் அம்பேத்கரின் அருந்தொண்டை வியந்து பாராட்டிப் போற்றியது மட்டுமின்றி, அவரது சமூக சிந்தனைகளை நாடறியச் செய்தார்.

உத்தமர் காந்தியாரின் கருத்துக்களை ஏற்காதவராக அவரோடு சமரசமின்றிப் போராடினார். ஆனால் காந்தியார் மதவெறிக் கும்பலால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கூறினார்.

கோடானுகோடி மக்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சந்திக்கும் துணிவு அற்றவர்கள், “பெரியார் சிலைகளை அகற்றுவோம்” என்று கூறுவது பேடிமைத்தனம்.

திரிபுராவில் ஆட்சிக்கு வந்தவுடன் புரட்சியாளர் லெனின் சிலையை காவிக் கூட்டம் உடைத்துத் தகர்த்து இருக்கிறது. இந்தப் பாசிச வெறித்தனம் கடும் கண்டனத்துக்கு உரியது. இதனைப் பெருமையாகக் கூறி, அதுபோல தமிழ்நாட்டில் பெரியார் சிலைக்கு நேரும் என்று பா.ஜ.க.வின் முக்கிய நபர் முகநூலில் பதிவிட்டுள்ளார். ஒட்டுமொத்தத் தமிழகமே அந்த நபருக்கு எதிராகக் கொந்தளித்து இருக்கிறது.

“தந்தை பெரியார் சிலை மீது கை வைத்தால் அவன் கை, கால் துண்டு துண்டாகப் போகும்” என்று ஈரோட்டில் நடந்த மறுமலர்ச்சி திமுக பொதுக்குழுவில் நான் எச்சரிக்கை செய்தேன்.

சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அந்த நபர் பெரியார் சிலை பற்றி தெரிவித்த கருத்து, அவரது சொந்தக் கருத்து என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அந்த நபரைக் கண்டிக்கவில்லை.

தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து இவ்வாறு பேசி வரும் அந்த நபர் அதிமுக அரசு வழக்குத் தொடராமல் வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.

நாள்தோறும் டிவிட்டரில் நூற்றுக்கணக்கான பதிவுகளைப் போடும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திறகு வரும்போதெல்லாம் மேடைகளில் தான் இந்தியில் பேசுவதை தமிழில் மொழி பெயர்க்கும் அந்த நபரைக் கண்டிக்கவில்லை. டிவிட்டரில் கூட கண்டனம் தெரிவிக்காதது மோடியின் எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

டில்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்துச் சென்று, பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து முறையிட்டேன். பெரியார் மீது பெருமதிப்பு கொண்டிருந்த வாஜ்பாய் அவர்கள் டில்லியின் மையப் பகுதியில் பெரியார் மையம் அமைக்க இடம் ஒதுக்கித்தர ஆணை பிறப்பித்தார்.

இன்று தமிழ்நாட்டில் சில சில்லரைகள் துள்ளிக் குதிப்பதை பா.ஜ.க. வேடிக்கை பார்க்கிறது. அதனால்தான் வேலூர் மாவட்டம் – திருப்பத்தூரில் பா.ஜ.க. நகர செயலாளர் உள்ளிட்ட இருவர் பெரியார் சிலையை சிதைக்க முயற்சித்துள்ளனர். பொதுமக்கள் அவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தி உள்ள திருப்பூர் பா.ஜ.க. நிர்வாகிகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழக அரசு தந்தை பெரியார் சிலைகளுக்கு சேதம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ஜ.க. தவிர்த்த சமூக நீதி காக்கப் போராடும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜ.க.வின் அக்கிரமச் செயலைக் கண்டிக்க வேண்டும்.

திருப்பத்தூர் நிகழ்வு தொடருமானால் பா.ஜ.க. விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

Kaalaimalar.com : காலைமலர்.காம்
error: Content is protected !!