Police stormed against those who opposed the IPL match: MK Stalin condemned

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டனத்துக்கு உரியது. வாலாஜா சாலையே போராட்டக்களமாக மாறியிருப்பது, தமிழக மக்களின் உணர்வுகளை எந்தளவுக்கு மத்திய, மாநில அரசுகள் அவமதித்துள்ளன என்பதை காட்டுகிறது.

இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரை கைது செய்து, அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தி, காவிரிப் போராட்டத்தை திசைதிருப்ப தமிழக காவல்துறையை அதிமுக அரசு பயன்படுத்துவது வெட்கக்கேடு. அதிமுக அரசுக்கு, தமிழ் உணர்வு அறவே பட்டுப்போய்விட்டது. காவிரிப் பிரச்சினையை விட, கிரிக்கெட் போட்டியை நடத்துவது அதிமுக அரசுக்கு முக்கியமாகிவிட்டது எனும் நிலை வேதனைஅளிக்கிறது.

காவிரி உரிமைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் இந்த அரசு, தமிழகத்தை ஆளும் தகுதியை மொத்தமாக இழந்து நிற்கிறது. போலீஸாரின் அத்துமீறலையும், அதிமுக அரசு காவல்துறை அதிகாரிகளைக் கட்டவிழ்த்து விடும் அராஜகத்துக்கும் திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், போட்டியில் பங்கேற்ற சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் அறவழியில் நடத்தப்படும் போராட்டமே வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!