The ‘0’ score is the medical place: NEET another reason to abolish the stretch? PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை :

மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், அது முற்றிலும் பொய் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன.

நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ‘0’ அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் புள்ளிவிவரம் சொல்லும் சேதியாகும். இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல் ஆகும்.

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆய்வு செய்தது.

அதில் நீட் தேர்வில் 150க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீட் தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

இத்தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

150-க்கும் குறைவான மதிப்பெண் என்பது எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூட தகுதியானதல்ல. ஆனாலும், இந்த மதிப்பெண் பெற்றவர்களில் 1990 பேர் மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததற்கு காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமான விதிகள் தான்.

அதிலும் குறிப்பாக இந்த 1990 பேரில் 400 பேர் இயற்பியல் – வேதியியல் பாடங்களில் 9க்கும் குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ பூஜ்ஜியம் அல்லது அதைவிடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

எனினும், உயிரியல் பாடத்தில் சற்று கூடுதலான மதிப்பெண் எடுத்ததால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிந்துள்ளது.

இவ்வாறு தேர்ச்சி பெற்ற 530 பேரில் 507 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஓராண்டை முடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு சுமார் 60,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தகுதி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் தரவரிசையில் முதல் 75,000 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், தரவரிசையில் 50,000-க்குள் வந்த பலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேநேரத்தில் தரவரிசையில் 5.30 லட்சத்திற்கும் கீழ் ஆறரை லட்சமாவது இடத்தைப் பிடித்தவர்களுக்குக் கூட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது.

இதற்கு காரணம் 50,000க்குள் இடங்களைப் பிடித்தவர்களால் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்திப் படிக்க வசதி இல்லை. அதனால் அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

அதேநேரத்தில் மதிப்பெண்களே இல்லாமல், பணத்தை குவித்து வைத்திருப்பவர்களால் நிகர்நிலைப் பல்கலை.களில் சேர முடிந்துள்ளது. அப்படியானால், மருத்துவப் படிப்பில் சேரத் தேவை மதிப்பெண்களா… கோடிகளா? என்ற வினா எழுகிறது.

இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 180-க்கு பத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் மருத்துவக் கல்வியை எவ்வாறு கற்க முடியும்? அதன் நுணுக்கங்களை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

இவர்கள் தட்டுத்தடுமாறி மருத்துவர்கள் ஆனாலும் கூட இவர்கள் தரும் மருத்துவம் எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? என்ற வினாக்களுக்கு மத்திய அரசு தான் விடையளிக்க வேண்டும்.

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 35% மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நீட் தேர்வில் அத்தகைய கட்டாயம் எதுவும் கிடையாது. இத்தகைய சூழலில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் படிக்க தகுதியுள்ளது என்றும் கூறுவது எந்த வகையான சமூகநீதி? என்பதை நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.

உண்மையில் நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், அத்தகைய சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாடவாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது. இது தான் மருத்துவக்கல்வி சீரழிவின் தொடக்கமாகும்.

நீட் தேர்வின் நோக்கம் தரத்தை வளர்ப்பதா… நிகர்நிலை பல்கலை.களை வாழ வைப்பதா? என்று வினா எழுப்பி கடந்த ஜூன் 6-ஆம் தேதி பா.ம.க. அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில் கூறப்பட்டிருந்த குற்றச்சாற்றுகள் அனைத்தும் உண்மை; நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை வாழ வைப்பதற்காக மட்டுமே நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. இத்தகைய முறையில் மருத்துவப் படிப்பின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்த முடியாது.

ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதை விட சிறந்த காரணம் தேவையில்லை. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும் எனதெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!