The Government of Tamil Nadu has been banned for plastics: milk agents association welcomed.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:

இயற்கையையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி, நிலத்தடி நீரையும், மண்ணையும் கெடுத்து, நீர் வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் நெகிழி காகிதங்கள், நெகிழிக் குடுவைகள் என எவ்வளவு காலம் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட மக்காமல் இருக்கும் நெகிழியை (பிளாஸ்டிக்) வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் தடை விதித்து 110 விதியின் கீழ் இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும் அத்தியாவசிய பொருளான பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவதுறையில் பயன்படுத்தப்படும் பொருட்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் நெகிழிக்கு (பிளாஸ்டிக்) மட்டும் விலக்கு அளித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இயற்கைக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் எதிராக இருக்கும் நெகிழிக்கு (பிளாஸ்டிக்) எதிரான தடை என்பது இன்றைய சூழலில் அவசியமானது மட்டுமல்ல கட்டாயமானதாகும். 110 விதியின் கீழ் இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள சிறப்பான இந்த அறிவிப்பினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனதார வரவேற்று தமிழக முதல்வரின் துணிச்சலான இந்த முடிவிற்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நெகிழி (பிளாஸ்டிக்) துறையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு மாற்று வழியை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும் எனவும், நெகிழியை ஒழிப்பதற்கான அறிவிப்பு வெறும் ஏட்டளவில் இல்லாமல் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியில் இருந்து நெகிழியை முற்றிலுமாக ஒழிப்பதற்கான பணிகளை இப்போதிருந்தே படிப்படியாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!