To restore peace restrictions in Thoothukudi district PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தூத்துக்குடி நகரில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், அதை தணிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் ஒரே நாளில் 11 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை போக்க மின்னல் வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அதற்கு அடுத்த நாளும் துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவி இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

அதுமட்டுமின்றி, மக்களை அச்சுறுத்தும் வகையில் தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய இணைப்புகளை மத்திய, மாநில அரசுகள் துண்டித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் தூத்துக்குடி மக்களின் கோபம் அதிகரித்திருக்கிறதே தவிர, சற்றும் குறையவில்லை.

தூத்துக்குடி அரச பயங்கரவாதம் குறித்த உண்மைகள் வெளிவருவதை தடுத்தால் மக்களின் கோபத்தை குறைத்து அமைதியை ஏற்படுத்தி விடலாம் என்ற நோக்கத்துடன் இணைய சேவையை ஆட்சியாளர்கள் துண்டித்துள்ளனர். இது மிகவும் பிற்போக்கான நடவடிக்கையாகும்.

ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வதந்திகள் பரவி, அதன் காரணமாக பதற்றம் ஏற்படும் போது, அதைத் தணிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இயல்பாகும். ஆனால், தமிழகத்தில் இணைய சேவை அன்றாட வாழ்க்கையுடன் இரண்டற கலந்து விட்ட நிலையில், அச்சேவையை நிறுத்தி வைப்பது பயனளிக்காது; மாறாக பாதிப்புகளையே ஏற்படுத்தும். தென் மாவட்டங்களிலும் அத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 11-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகும்.

நிரந்தமான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து அதைக் கொண்டு தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய முடியாமலும், 11-ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்க முடியாமலும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் சேவைகள் பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்களில் பல இடங்களில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலைமையை கட்டுப்படுத்த மத்திய துணை இராணுவம் வரவழைக்கப்படவிருப்பதாக செய்திகள் திட்டமிட்டு கசியவிடப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் அச்சமடைவார்கள் என்பது அரசின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், ஏற்கனவே ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையால் உயிர்களையும், உரிமைகளையும் இழந்து கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள், இத்தகைய செயல்களால் இன்னும் கோபமடைந்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் அமைதியை ஏற்படுத்த உதவாது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அரசுத்துறை செயலாளர்கள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகிய இருவருமே நேர்மையான பொறுப்பான அதிகாரிகள் ஆவர். ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல், அமைதியை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் இன்னொரு மோதல் நடந்தால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு விடும்.

அதைத் தவிர்த்து அமைதியை ஏற்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்; இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டும்; தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெற்று மக்கள் சுதந்திரமாகவும், இயல்பாகவும் நடமாட அனுமதிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மக்களுக்கு ஆட்சியாளர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!