Women should try to know new things: the Collector of Perambalur

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் குறித்த கருத்தரங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று (12.03.2018) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது:

இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். மேலும், பெண் உரிமைக்காகவும், பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அவர்களால் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, தமிழக முதலமைச்சரால் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும், துவண்டுபோகாமல், போராடி வெற்றி பெற வேண்டும். ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பெண்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசால் மகளிருக்கு செயல்படுத்தப்படும் பணிக்கு செல்லும் பெண்களுக்கான மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வன்கொடுமைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள் அனைவரும் தற்காப்புக்கலையை அறிந்துகொள்ள வேண்டும். ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் போட்டியிலும் பெண்கள் அத்துறைகளில் சிறப்பிடம் பிடிக்க தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சரால் தமிழகம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையம், பெண் காமாண்டோ படைகள் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டு, பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

பெண்கள் அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு இணையாக முன்னேற்றமடைய பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். எனவே, பெண்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும், என பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பேசியதாவது:

பெண்கள் அனைவரும், தங்களை அனைத்து துறைகளிலும் முன்னிலைப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும், பல்வேறு வகையான புதிய விஷயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். பெண்கள் அனைவரும் புதிய விஷயங்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும்போதுதான், வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். மேலும், பெண்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பெரியவர்களை மதிக்கும் பண்பாடுகளை கற்றுத்தர வேண்டும்.

இதன்மூலம் வருங்கால சமுதாயம், ஆண் பெண் பேதமின்றி அனைத்து துறைகளிலும், இருவரும் சரிசமமாக பணியாற்றி வெற்றி பெறுவதற்கு பேருதவியாக இருக்கும். மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி உள்ளார். எனவே அனைத்து பெண்களும், இத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என பேசினார்.

அதனைத் தொடர்ந்து சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளாக குடும்ப வன்முறை, வரதட்சணை, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பாலியல் வன்முறை, குழந்தை திருமணம், முதியோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து பெண்கள் தங்களை சட்டப்பூர்வமாக காத்துக்கொள்ளும் வகையில் சமூக நலத்துறையின் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நிமிடத்திற்குள் அதிகளவில் இருசக்கர வாகனத்தின் மூலம் 8 போட்டு காண்பித்தவர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், மகளிர் திட்ட அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, ஒய்.பி.எச்.பி. மோட்டார் நிறுவனத்தின் நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!