ஆலத்தூர் வட்டாரத்தில் வளரும் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம்” நாளை துவக்கம்

schedule
2015-06-09 | 17:45h
update
2026-04-05 | 08:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 490 அங்கன்வாடி மையங்களின் வாயிலாக கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், 3 வயதுக்குப்பட்ட குழந்தைகளின் உடல் நலத்தினை மேம்படுத்திட இணை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் 4082 கர்ப்பிணிகள், 3222 பாலூட்டும் தாய்மார்கள், 18066 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
ஊட்டச்சத்து நிலையினை வளரிளம் பருவத்திலிருந்து மேம்படுத்தும் பொருட்டு ஆலத்தூர் வட்டாரத்தில் வளரிளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக 13 வயது முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பெண்களுக்கு அந்தந்த பள்ளிகளின் வாயிலாக ஒவ்வொரு நாள் மாலையும் அவித்த சுண்டல், இனிப்பு தானிய உருண்டை மற்றும் உலர் நெல்லிக்காய் வழங்கப்பட உள்ளது.
வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம், நோய்வாய் படும் விகிதம் ஆகியவற்றை குறைக்கவும், வளரிளம் பெண்களுக்கு வாழ்க்கைத் திறன் கல்வி குறித்து பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

Advertisement

இத்திட்டம் ஆலத்தூர் வட்டாரத்திலுள்ள அனைத்து நடுநிலைப் பள்ளி, உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

இதன் முதல் கட்டமாக அனைத்து வளரிளம் பெண்களுக்கும் மருத்துவ குழுவினரை கொண்டு உடல் நல பரிசோதனை உயரம், எடை மற்றும் இரத்தத்தின் அளவு கணக்கிடும் பணி 10.06.2015 முதல் 17.06.2015 வரை அந்தந்த பள்ளிகளில் நடைபெறும்.

முதல்நாள் 10.06.2015 அன்று கொளக்காநத்தம் மற்றும் காரை அரசு மேல்நிலை பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 7 மருத்துவ குழுக்களின் மூலமாக மற்ற அனைத்து பள்ளிகளிலும் இம்மருத்துவ முகாம் நடைபெறும்.

அடுத்த கட்டமாக அனைத்து மாணவிகளுக்கும் பள்ளி நேரம் முடிந்த உடன் மாலை 4.20 மணி முதல் சுண்டல் மற்றும் இனிப்பு உருண்டை வழங்கும் பணி நடைபெறும். இந்த இணை உணவு வழங்கும் திட்டம் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லா வளரிளம் பெண்களுக்கும் அந்தந்த பள்ளியில் வைத்து அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் இந்த வளரிளம் பெண்களின் எடை எடுக்கப்பட்டு பி.எம்.ஐ வளர்ச்சி அட்டை மூலம் கணக்கீடு செய்யப்படும்.

மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் வளரிளம் பெண்களில் தேர்வு செய்யப்பட்ட 350 வளரிளம் பெண்களுக்கு சத்துணவு மற்றும் சுகாதார கல்வி மற்றும் பொது சேவைகளை பெறும் முறைகள் குறித்து 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது மேலும் வளரிளம் பெண்களிடையே தலைமைத்துவ பண்புகள் கொண்ட 30 வளரிளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவித்த 10 வாழ்க்கை திறன்கள் குறித்து 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு மருத்துவ அலுவலர் மூலம் உடல்நல பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறும். மேலும் வளரிளம் பெண்களிடையே உள்ள திறமைகளை வெளிகொணரும் பொருட்டு வளரிளம் பெண்கள் திருவிழா 6 இடங்களில் நடைபெற உள்ளது.
இத்திட்டம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நடைபெறும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2026 - 08:25:09
Privacy-Data & cookie usage: