வேளாண் இணை இயக்குநர்(பொ) ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்குத் தேவையான உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தரமான மற்றும் தேவையான உரங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது.
மத்திய அரசு இராசாயன உரங்களுக்கு உரச்சத்து அடிப்படையிலான மானியம் வழங்கி வருகிறது. எந்தவொரு உர மூட்டையிலும் மத்திய அரசு அந்த உரத்திற்கு வழங்கும் மானியத் தொகையும், உரத்திற்கான சில்லரை விற்பனை விலையும் அச்சிடப்பட்டிருக்கும். உர விற்பனையாளர்கள் உரங்களை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டிற்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரங்களுக்கு உரிய பில் கொடுக்க வேண்டும். அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுவோர் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
யூரியா உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் தற்சமயம் வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவையே உற்பத்தி செய்கின்றனர். வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவை பயன்படுத்துவதால் தழைச்சத்து விரயமாவதை தடுக்கிறது. தழைச்சத்து கொஞ்சம் கொஞ்சமாக பயிருக்குக் கிடைக்கிறது. மேலும் மண் மூலம் பரவும் நோய்கள் மற்றும் மண்ணில் உள்ள பூச்சிகள், நூற்புழுக்களுக்கு எதிராக செயல்பட்டு பயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. விவசாயிகள் பயிருக்கு இடும் யூரியாவின் அளவில் 5 முதல் 10 சதவீதம் வரை அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
ஐம்பது கிலோ உர மூட்டைகளின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையானது வேம்பு கலந்த யூரியாவிற்கு ரூ.284, ஸ்பிக் டிஏபி ரூ.1225, ஐபில் டிஏபி ரூ.1210, எம்சிஎப் டிஏபி ரூ.1213, கொரமண்டல் டிஏபி ரூ.1225, இப்கோ டிஏபி ரூ.1185, 20:20:13 காம்ப்ளக்ஸ் உரங்களுக்கு பாக்ட் காம்ப்ளக்ஸ் ரூ.909, பாக்ட் ஜிங்கேட்டட் காம்ப்ளக்ஸ் ரூ.934, ஸ்பிக் காம்பளக்ஸ் ரூ.1102, இப்கோ 10.25.25 காம்ப்ளக்ஸ் ரூ.1080, கொரமண்டல் 16.20 காம்ப்ளக்ஸ் ரூ.890, ஐபில் 15.15.15 காம்ப்ளக்ஸ் ரூ.890, ஐபில் 16.16.16 காம்ப்ளக்ஸ் ரூ.900, ஐபில் எம்ஓபி ரூ.800, எம்சிஎப் எம்ஓபி ரூ.800, ஸ்பிக் சூப்பா; ரூ.362, கோத்தாரி சூப்பர் ரூ.362 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்போர் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் (பொ) 9940964438 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
என வேளாண்மை இணை இயக்குநர் (பொ) தெரிவித்துள்ளார்.