பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அங்கீகரிக்க வேண்டுமென நுகர்வோர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் பேசியது:
ஏற்கனவே, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எரிவாயு உருளை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 கிலோ மீட்டருக்குள்பட்ட பகுதிகளில் எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் போது கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது, ரூ. 30 முதல் ரூ. 40 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எரிவாயு நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் வாழங்காததே இதற்கு காரணமாகும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை, தொழிலாளர் அமைப்பு மூலம் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிவாயு அலுவலகத்தில் பதிவு செய்து 5 நாள்களுக்கு மேலாகியும் விநியோகம் செய்வதில் குறைபாடுகள் உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் களைய வேண்டும். மேலும், நுகர்வோருக்கு எந்த தேதியில் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படுகிறதோ, அதே தேதியில் ரசீது வழங்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் தெரிவிக்கும் குறைபாடுகளை தவிர்க்க, அனைத்து எரிவாயு நிறுவனங்களின் மேலாளர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நுகர்வோர் தெரிவிக்கும் புகாருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் பதில் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விவசாயிகள் சங்க பிரமுகர் ஏ.கே. ராஜேந்திரன்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோருக்கு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அரசால் வழங்கப்படும் மானியம், நுகர்வோரின் வங்கி கணக்கில் குறைவாக வரவு வைக்கப்படுகிறது. எனவே, எரிவாயு உருளையின் விலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதி அன்பழகன்:
கிராமப் புறங்களில் உள்ள நுகர்வோருக்கு எரிவாயு உருளைகளை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். மேலும், கூடுதலாக வாடகை வசூலிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரமுகர் முருகேசன் உள்ளிட்ட எரிவாயு நுகர்வோர் பலர் பங்கேற்றனர்.