பெரம்பலூர்: பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கரும்புக்குரிய தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பை தலைகீழாக பிடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்கு முன்னதாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கரும்பை தலைகீழாக பிடித்து நுõதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 2014-2015ம் ஆண்டு அரவை பருவத்துக்கு பெரம்பலுõர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய சுமார் மூவாயிரம் விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை 32 கோடியே 29 லட்சம் ரூபாயை பெரம்பலுõர் சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும், இணை மின் உற்பத்தி திட்டம், ஆலையை நவீனப்படுத்திடும் திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு மறுக்காமல் வங்கி கடனுதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நீலகண்டன், மாணிக்கம், திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் வரதராஜன், நிர்வாகிகள் ரமேஷ், ராமசாமி, மணி, வேணுகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.