பெரம்பலூர்: பெரம்பலூர் வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) ஈடுபட்டனர்.
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை ஏல முறையில் எள் மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் எள் சாகுபடி செய்த விவசாயிகள் கலந்துகொண்டு, வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு கட்டுப்படியான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த எள் மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஒரே ஒரு வியாபாரி மட்டுமே கலந்துகொண்டு விவசாயிகளின் எள் மூட்டைகளை மிகவும் குறைந்த விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் 80 கிலோ எடைகொண்ட மூட்டை ஒன்று ரூ. 6,500க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. ரூ. 4 ஆயிரத்துக்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டதாம். இதுகுறித்து, வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கச் செயலர் அருண்குமாரிடம் விவசாயிகள் முறையிட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கச் செயலரை கண்டித்தும், எள் மூட்டைக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அனைத்து வியாபாரிகளுக்கும் தகவல் அளித்து ஏலத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ததகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகளின் சலை மறியல் போராட்டத்தால், பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது