பெரம்பலூர் : பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 80 பேரை பெரம்பலூர் போலீஸார் இன்று கைது செய்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே, சி.ஐ.டி.யூ வட்டக்கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர். சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் 30 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும்.
ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள ஊதிய வரம்புகளை மத்திய அரசு உயர்த்த உள்ளதையும் கணக்கிட்டு, பொறியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் 30 சதவீத ஊக்கத்தொகை, கருணைத்தொகை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பகிர்மான வட்டங்களில் நுகர்வோரிடம் வசூலிக்கும் தொகையை, பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கும் செயலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடர்ந்து, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புறநகர் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ மாவட்ட செயலர் ஆர். அழகர்சாமி, பொருளாளர் பி. முத்துசாமி, துணைத் தலைவர் எ. கணேசன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி ஸ்ரீரங்கன் உள்ளிட்ட 80 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.