29-10 agl
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் கு. வரதராசன் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகேயுள்ள மலையாளப்பட்டியில் பச்சமலைத் தொடர் உள்ளது. இப்பகுதியில் மழைக்காலங்களில் வரும் மழை வெள்ளம் மலையாளப்பட்டியில் கல்லாறாக உருவாகி கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்தை அடைகிறது.

இந்த நீரை சேமிக்க சின்னமுட்லு என்ற இடத்தில் நீர்த்தேக்கம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து, 1952-ல் திட்டம் உருவாக்கப்பட்டு 1973-ல் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, 2005- 2006 ஆம் ஆண்டு திட்ட மதிப்பீடு செய்த தமிழக அரசு, இத்திட்டத்தை கைவிடப்பட்டதாக அறிவித்தது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் 2,500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும். எனவே, 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பேசினார்.

அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் பி. ரமேஷ் பேசியது:

குரும்பலூர் பேரூராட்சியில் வெறிநாய் கடித்து உயிரிழந்த பசு மாடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேளாண்மை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பேருந்துகளில், பேருந்து பயண அட்டை வைத்துள்ள மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என். செல்லதுரை பேசியதாவது:

ரூ. 108 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளனூர் கிராமத்தில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்தி வரும் மயில்களை கட்டுப்படுத்தி, விவசாய பயிர்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளதால், வெளியூர் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என பேசினார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் பேசியதாவது:

ஏரியில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். லாடபுரத்திலிருந்து துறைமங்கலம் கீழே வரையிலான வரத்து வாய்க்கால்கள், ஏரிகளை தூர்வார வேண்டும். நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு புதுக்கிணறு வெட்ட, ஆழப்படுத்த மற்றும் மோட்டார்கள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் பெறப்பட்ட கடனுதவிகள் கடந்த திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது எடுக்கப்படும் வில்லங்க சான்றிதழ்களில் உள்ளது. எனவே, அவற்றை நீக்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பேசினார்.

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அ. வேணுகோபால் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ஹோமியோபதி, சித்தா, இயற்கை மருத்துவத்துக்கான பிரிவுகள் தொடங்கப்பட்டு மருத்துவர்கள் பணியமர்த்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க பென்னகோணம், லப்பைகுடிகாடு, திருமாந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து சுமார் 3,300 ஏக்கர் விவசாய நிலங்கள் வாங்கப்பட்டது. 8 ஆண்டுகளாகியும் அத்திட்டம் நிறைவேற்றப்படாததால், அந்த நிலங்களை அனைத்தும் பாழடைந்து காணப்படுகிறது. எனவே, அத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கம் அளித்தார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வளர்மதி உள்பட விவசாய சங்க பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!