பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அசோலா தீவனப்பயிர் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் அனிட்ஜாய், அஞ்சுஜான், இந்துமதி, ஜனனி, கமலக்கன்னி, மரியாலூக், புனிதவதி, ராஹின்ரூபிகா ஆகியோர் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அசோலா தீவனப்பயிர் வளர்ப்பு முறைகள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் உழவர்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும், அசோலா தீவனப்பயிர் சாகுபடி செய்வதற்கு குறைந்த அளவில் தண்ணீர் தேவைபடுகிறது. சிறு, குறு விவசாயிகள் முதல் கால்நடை வளர்ப்புத்தொழிலில்
ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும் இப்பயிரை மிக எளிதில் சாகுபடி செய்யலாம். சாகுபடி செலவு–மிக, மிக குறைவு, இப்பயிரை கால்நடைகளுக்கும்,
கோழிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து கொடுக்கலாம்.
இவ்வாறு கொடுப்பதன் மூலம் கால்நடைகள் மிகவும் ஆரோக்கியத்துடன் அதிகநாள் உயிர் வாழ்ந்து பால் உற்பத்தியை அதிகளவில் வழங்கும், முட்டைகள் எண்ணிக்கை
அதிகரிக்கும், மாடு, கோழி மட்டுமல்லாமல் இத்தீவனத்தை ஆடு, முயல், பன்றி, காடை, மீன் போன்றவைகளுக்கும் இதனை உணவாக கொடுக்கலாம்.
நெற்பயிர் வயல்களுக்கு நுண்ணுயிர் உரமாக பயன்படுத்தலாம், ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கிலோ அசோலாவை பயிரிட வேண்டும். இப்பயிர் 20 முதல் 25 நாட்களுக்குள் நன்கு வளர்ந்து விடும். மேலும் அசோலாவை நுண்ணுயிர் உரமாக பயன்படுத்துவதன் மூலம் 20 முதல் 30 சதவீதம் முதல் உரச்செலவை குறைத்திடலாம், வயல்களில் களைகள் வளர்வது, நீர் ஆவியாதல் 20 முதல் 25 சதவீதம் குறைந்திடும் என்று அசோலா பயிர் குறித்து பல்வேறு வளிக்கங்களை அளித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர்கள் மணிகண்டன், துரைசாமி ஆகியோர் உட்பட செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொது
மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.