பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 25, ஆக. 1 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவம், தொழிற்கல்வி, வேளாண்மை அறிவியல், கால்நடை அறிவியல், பி.எஸ்.சி நர்சிங், பி.எட், டிப்ளமோ மற்றும் இதர படிப்புகளில் சேர விரும்புவோருக்கு மாவட்ட நிர்வாகமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான கல்விக் கடன் முகாம் ஜூலை 25 ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் வேப்பூர் வட்டாரங்களுக்கும், ஆக. 1 ஆம் தேதி ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களுக்கும், 22 ஆம் தேதி அனைத்து வட்டாரங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், 10 மற்றும் ப்ளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதம், கல்விக் கட்டண சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ், பெற்றோர் மற்றும் மாணவருக்கான பான் கார்டு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளான லட்சுமி விலாஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி கரூர் வைஷ்யா வங்கி, எச்.டி.எப்.சி வங்கி, தமிழ்நாடு மெர்கண்டல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, பாண்டியன் கிராம வங்கி உள்ளிட்ட வங்கிகளும் கல்விக்கடன் முகாமில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க உள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!