பெரம்பலூர்: தமிழ்நாட்டில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டு – நவம்பர் 1 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது – உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் விதமாக நியாய விலைக்கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு, விற்பனை நிலவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்களுக்கு எளிதில் தெரியும் வகையில் நியாயவிலைக்கடைகள் இணையதளத்துடன் இணைக்கும் பணி துவங்க திட்டமிடப்பட்டு சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சுமார் 40 நியாய விலைக்கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தை தமிழக அரசு தேர்வு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்ட அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமது முன்னிலையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
தமிழக அரசு பொதுமக்களுக்கான திட்டங்கள் அவர்களைச் சென்று சேரும் வழிவகைகளை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் பொது விநியோகத்திட்டங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கபட்டு வருகிறது.
நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுவிநியோகப் பொருட்களின் இருப்பு, விற்பனை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்துடன் இணைக்கப்பட உள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முழுநேரக் கடைகள் 201, பகுதிநேரக்கடைகள் 81 மற்றும் 1 மண்ணெண்ணை வழங்கும் நிலையம் என் மொத்தம் 283 கடைகளிலும் நியாய விலைக்கடைகளை ஆன்லைனோடு இணைக்கும் கருவி வழங்கப்படவுள்ளது.
இக்கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு உரிய செய்முறை விளக்கங்களும், அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில்களும் அளிக்கப்பட்டது.
இத்திட்டம் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும்போது பொதுமக்கள் தங்கள் பகுதி நியாயவிலைக் கடையில் உள்ள பொருட்களின் இருப்புகள், விற்பனை விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். நியாயவிலைக்கடை திறக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைக்கூட அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தினால் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறித்த விமர்சனங்களோ, இருப்பு மற்றும் விற்பனை குறித்த சந்தேகங்களோ பொதுமக்களுக்கு ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க முடியும்.
பொதுமக்கள் நியாய விலைக்கடையில் பொருட்களை வாங்கினால் உடனடியாக சம்மந்தப்பட்ட நபரின் கைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் சென்றுவிடும். இதனால் போலிநபர்கள் மற்றவர்களின் ரேஷன் கார்டை பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும். பொதுவிநியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்க 1967 அல்லது 18004255901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்தார;.
இந்நிகழ்வின்போது சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.