பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே அமைந்துள்ள எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் 50 மெகாவாட் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
nn
ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் அமைந்துள்ள எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை வளாகத்தில் சொந்த உபயோகத்திற்காக 50 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட சப் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நவாப்ஜான் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது தெரிவித்தது: அனல் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்திற்காக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நடத்தப்படுகிறது. மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் வெளியேற்று ரசாயனப் பொருள்களால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுப்படுவதுடன் ஆடு, மாடு, பறவைகள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அது குறித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை யாருக்கும் கொடுக்கப்பட வில்லை. அந்த சுற்றுச்சூழல் அறிக்கையில் பல்வேறு தகவல¢கள் மறைக்கப்பட்டுள்ளது. சமய வரலாற்றுச் சின்னங்கள் இந்தப் பகுதியில் இருந்தால் திட்டம் தொடங்கக்கூடாது என்ற நிலையில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில், சாத்தனூர் கல்மரம் உள்ளது. இதனை அறிக்கையில் காண்பிக்காமல் மறைத்து அறிக்கை கொடுத்து உள்ளனர்.

தற்போது தொடங்கப்படவுள்ள மின் உற்பத்தித் திட்டத்திற்காக நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட உள்ளது. அதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரியில் இருந்து பெற்றுதான் பயன்படுத்த வேண்டும்.

காவிரியில் விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு மட்டும் தண்ணீர் எப்படி கொடுக்க முன் வருகின்றனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் இந்த திட்ட்த்தை தொடங்க அனுமதிக்கக்கூடாது.
இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் அதில் இருந்து வெளியேறும் பல்வேறு நச்சுப்பொருள்களால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய், ரத்தசோகை, இதய நோய், கிட்னி பாதிப்பு, நூரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த திட்டத்தை முற்றிலும் தடை செய்வதுடன் இந்த கூட்டத்தை ரத்து செய்து கூட்டம் குறித்து அனைத்துப் பகுதி மக்களுக்கும் அறிவிப்புக் கொடுத்து கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா பேசியது: இந்த மின் உற்பத்தி திட்டம் தற்போது 50 மெகாவாட் என தொடங்கப்பட்டு பின்னர் 500 ஆக மாறும். இந்த திட்டத்திற்காக இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு காரைக்கால் வழியாக லாரிகள் மூலம் கொண்டு வரப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு 1100 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் அதனை கொண்டு வரப்படும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நிலக்கரியை எரிக்கும் போது வெளியாகும் கதிர் வீச்சிற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

சமூக ஆர்வலர் அசன்முகமது பேசியது: இந்த திட்டத்திற்காக வழங்கும் தண்ணீரை இந்தப் பகுதியைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு வழங்க முடியும். பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக தண்ணீர் எப்படி வழங்கலாம். இந்த திட்டத்தின் மூலம் வெளியாகும் சாம்பல் மனித உடலில் படிவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே, இந்த திட்டத்திற்கு மாற்றாக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.

இதேபோல், நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அம்மாபாளையம் தமிழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஞானசேகரன், மலையப்பநகர் சுப்ரமணியன், சிவக்குமார். இந்நிய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி அமைப்பாளர் ரகுபதி, ஆலத்தூர் ஒன்றியத் தலைவர் காமராஜ், மலையப்பநகர் வெள்ளையம்மாள், புதுக்குறிச்சி சிவகுரு, மனித உரிமை அமைப்பு மாநில பொருளாளர் சரவணன், நாரணமங்கலம் ரமேஷ், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் துரைராஜ், விஜயகோபாலபுரம் துரைசாமி, நாரணமங்கலம் நடேசன், பெரம்பலூர் ஆறுமுகம், கார்த்திகேயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்லதுரை, தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இளையராஜா, பா.ஜ.க மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மலையப்ப நகர் ரஜினி, ராஜேஸ்வரி, செல்வகுமார், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
நிறைவாக பேசிய சப் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி, இந்த திட்டத்தின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் தெரிவித்த கருத்துகள் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த திட்டம் தொடங்க முடியும். திட்டம் தொடர்பாக மறு கூட்டம் நடத்துவது தொடர்பாக பின்னர் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!