பெரம்பலூர்: பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் பகுதிகளில் பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் மற்றும் நியாய விலைக்கடைகளில் மக்களின் தகவல்களை இணையதளத்துடன் இணைக்கும் பணிகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளும் இணையதளத்துடன் இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. நவம்பர; 1ஆம் தேதி நாளை முதல் இந்த முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதனையொட்டி தகவல்களை இணையதளத்துடன் இணைக்கும் பணியைச் செய்யும் கருவியை இயக்கும் பயிற்சி நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு இன்று நியாய விலைக்டைகளில் பொதுமக்களின் தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
குன்னம் வட்டம் அசூர் மற்றும் எழுமூர் ஊராட்சிகளில் உள்ள் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களின் தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை பார்வையிட்ட முதன்மைச் செயலர், இந்தப் பணி நடைபெறுவதால் பொதுமக்களுக்கு அன்றாடம் பொதுவிநியோகப் பொருட்கள் வழங்குவதில் எந்த தொய்வும் ஏற்படக்கூடாது என்று விற்பனையாளர்களுக்கு அறிவரை வழங்கினார். பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடமும் இத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார். தகவல்களைப் பதிவு செய்த மக்களின் அலைபேசிகளில் குறுந்தகவல் வந்துள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின் மூலமாக நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு சிறப்பான சேவை வழங்குதல் மற்றும் ஊழியர்களின் திறன்மேம்பாடு அடைதல் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கப்பெறும். மேலும் கடைகளுக்கு வரும் பொருட்களின் ஆரம்ப இருப்பு, பொருட்களின் வரவு, விற்பனை செய்யப்படும் பொருட்களின் நிலவரம், தற்போது கடைகளில் மீதம் உள்ள பொருட்களின் விவரங்கள், விற்பனை முடிந்த பின் அன்றைய தினத்தின் ஆரம்ப இருப்பு, அந்நாளிற்கான உணவு பொருட்களின் வரவு, அந்நாளின் மொத்த விற்பனைகள் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தின் மூலமாக பொதுமக்கள் காண இயலும்.
முன்னதாக பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக உணவு கிடங்குகளில் பொதுவிநியோகப் பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசிகளின் தரம் குறித்து மூட்டையிலிருந்த அரிசிகளை வெளியில் எடுத்துப்பார்த்து ஆய்வுசெய்தார். அரிசிகளை மூட்டைகளாக கட்டும் முன் அதை எடைபோடச் சொல்லி சரியான எடையில் அரிசி மூட்டைகள் தயார் செய்யப்படுகிறதா என்றும் முதன்மைச் செயலர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான், குன்னம் வட்டாட்சியர் ஷாஜகான் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.