பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் ஜன.7 முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பருத்தி ஏலவிற்பனை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த பருத்தியினை பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு அதிக அளவில் கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலையும் அதன் மூலம் கூடுதல் வருமானமும் பெற்றனர். அதேபோல் இந்தஆண்டு பருத்தி ஏலவிற்பனை 07.01.2016 (வியாழக்கிழமை) முதல் துவங்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி 20 ஆயிரத்து 300 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் தங்களது பருத்தியினை பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெற வேண்டும். ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகளும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் வயலில் பருத்தி எடுக்கும்பொழுதே நன்கு வெடித்து மலரந்த தூசி சருகு இல்லாத தூய்மையான வெண்மையான பருத்தியை தனிக்கூடையிலும், நிறம்மாறிய பருத்தியினை வேறொரு கூடையிலும் தனித்தனியாக சேகரிக்கவேண்டும்.
சேகரித்த பருத்தியினை ஈரப்பததம் 8 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் வகையில் நிழலில் நன்கு உலர்த்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும்.
கிராமப்புறங்களில் தனியாரிடம் விற்பனை செய்யும் போது எடையில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்த்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சரியான எடையும், மறைமுக ஏலத்தில் போட்டி மூலம் அதிக விலையும் பெற முடியும்.
எனவே விவசாயிகள் அறுவடை செய்யும் பருத்தியினை ஒழங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டுவந்து நல்ல விலைக்கு விற்பனைசெய்து பயன் பெறவேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.