பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளது. தோரணத்திற்கான கொத்து மஞ்சள் தயார் நிலையில் உள்ளது.
மஞ்சள் கிருமிநாசினி மட்டுமல்லாமல், பெண்களுக்கான மிகப்பெரிய அழகு சாதனம் கூட. பல மருத்துவக் குணங்களை கொண்டது. ஆனால், நாகரீகம் கருதி, அதை ஒதுக்குவோர் இன்று ஏராளம்.
மங்கலப் பொருளாக இருப்பதால் பொங்கலுக்கு மஞ்சள் கொத்தை அனைவரும் விரும்பி வாங்குவர். கடந்த ஆண்டைவிட மஞ்சள் கொத்து சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால் வரத்து குறைந்து நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, எசனை, மேலப்புலியூர், அரசலூர், அன்னமங்கலம், மலையாளப்பட்டி, அனுக்கூர், கீழப்புலியூர், செங்குணம். சிறுகுடல், அருமடல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் சாகுபடி இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் செய்து உள்ளனர். இவை திருச்சி, திண்டுக்கல் சென்னை பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகைக்காக அனுப்ப தயாராகி வருகிறது.
தமிழர்களின் முக்கியப் பண்டிகையாகவும், உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தக்கூடிய பண்டிகையாகவும் இருப்பது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்போதிருந்தே தமிழர்கள் தங்கள் வீட்டிலுள்ள பாத்திரங்களைக் கழுவி சுத்தப்படுத்தி, வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளனர். இதில் வெளியேற்றப்படும் கழிவுகளை போகிப் பண்டிகையன்று தீயிட்டுக் கொழுத்துவர்.
அதன்பிறகு தை முதல்நாள், சூரியப்பொங்கல் பண்டிகைக்காக வீடுகளை அலங்கரிப்பார்கள். திண்ணைகளில் செம்மண், சுண்னாம்பு கோலமிட்டு, வாசல்களில் வண்ணவண்ணக் கோலமிடும் தமிழர்கள் வீட்டுவாயில்களை தோரணங்களைக் கட்டி அலங்கரிப்பார்கள். அதேபோல், மாட்டுவண்டிகளையும் அலங்கரிப்பார்கள். இவற்றில் பிரதானமாக இடம்பெறுவது மஞ்சள் கொத்துகளும் ஒன்றாகும். இதற்காக வயல்களில் இருந்து மஞ்சள் கொத்து (செடிகளை) கிழங்குடன் எடுத்து வந்து வாயில்களில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பொங்கல் பண்டிகை விற்பனைக்கு அறுவடைசெய்ய மஞ்சள்பயிர் தயாராகி வருகிறது. இன்னும் சுமார் இரு வாரங்களே உள்ள நிலையில் செழுமையாக மஞ்சள்பயிர் வளர்ந்துள்ளதால் வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.