விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலையில் வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள தொகையினை தரக்கோரியும், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் வரவேண்டிய நிலுவைத்தொகையினை பெற்றுத் தரவேண்டியும் வலியுறுத்தி 11 விவசாய சங்க தலைவர்களும் கோரிக்கை வைத்தனர;.
இதனை கேட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:
விவசாயிகள் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முக்கிய பங்காற்றி வருபவர்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகிய உணவை மக்களுக்கு விளைவித்து தருபவர்கள். தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றார்கள்.
இந்நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை என்பது நாடு முழுவதிலும் உள்ள பிரச்சனையாகும். இந்த பிரச்சனை குறித்து அரசின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மிக விரைவில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும். எனவே விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2015-ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 270 மி.மீ ஆகும். 26.8.2015 வரை ஆகஸ்ட் மாதம் முடிய 435.44 மி.மீ மழை பெய்துள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாரில் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் யூரியா 659 மெ.டன், டி.ஏ.பி. 760 மெ.டன், பொட்டாஷ் 311 மெ.டன் மற்றும் என்.பி.கே. 117 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது சரியான விலையில் பெற்று பயனடையுமாறு விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
தேசிய நிலையான விவசாய இயக்கத்தில் 50 சதவீத மானியத்தில் கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கப்படுகிறது, இத்திட்டத்தில் கலந்துகொள்வதற்கு சொந்தமாக ஆடு மாடு இல்லாமலும், சிறு மற்றும் குறு விவசாயிகளாகவும் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பருத்தி மற்றும் மக்காச்சோளத்திற்கு வழங்கப்படும் மானிய விவரங்கள்பற்றி விரிவாக வேளாண்மை இணை இயக்குநர் அவர் எடுத்துரைத்தார்.
தோட்டக்கலைத்துணை இயக்குநர்(பொ) தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் வழங்கப்படும் மானியம் பற்றி கூறினார். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார விரிவாக்க மையங்களில் விவசாயிகள் கொடுத்து பதிவு செய்யுமாறு தெரிவித்தார். நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை விரிவாக்க மையங்களில் விண்ணப்பங்கள் கொடுத்து முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
கால்நடை பராமரிப்புத்துறையில் மாடுகளை தாக்கும் கோமாரி நோயினை தடுக்க அனைத்து பகுதிகளிலும் செப்டம்பர் 1 முதல் 21 வரை தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இதற்கான பத்திரிக்கை செய்தி மற்றும் அறிக்கைகள் வெளியிடப்படும். அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதிகளில் உள்ள மாடுகளை கொண்டுவந்து தடுப்பூசி போட வலியுறுத்துமாறும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் 35 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மாரிமுத்து, வேளாண்மை இணை இயக்குநர்(பொ), அய்யாசாமி, வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே)(பொ) ஆறுமுகம், தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ), இந்திரா, மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் வளர்மதி, கூட்டுறவுத்துறை, இணைப்பதிவாளர், சிவ.முத்துகுமாரசாமி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.