பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பிரிவு சாலையில் உள்ள ரோவர் வேளாண் அறிவியல் மைய கால்நடை அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர் ஆதிலட்சுமி தீவனச்சோளப்பயிர் வளர்க்கும் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

கால்நடை வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் தீவனச்சோளப்பயிர் பயிரிட்டு தங்கள் கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து வருகிறார்கள். இவ்விவசாயிகள், தீவனச்சோளப்பயிரில் உள்ள சயனைட் நச்சுபற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். பசுந்தீவனத்தில் தீவனச் சோளப்பயிர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

பால் உற்பத்தியை அதிகரிப்பதாலும் அதிக மகசூல் தருவதாலும் தீவனச் சோளப்பயிர் கால்நடை வளர்ப்பில் இன்றியமையா இடம் பெற்றுள்ளது. எனினும், சிலநேரங்களில் மட்டும் தீவனச்சோளப்பயிர் சாப்பிட்ட கால்நடைகள் மயங்கி விழுந்து இறந்து விடுகின்றன. இதற்குகாரணம் தீவனச் சோளப் பயிரில் உள்ள சயனைட் நச்சுதான்.

இதனைக் கேட்டு விவசாயிகள் பதட்டப்பட தேவையில்லை. பின்வரும் ஆலோசனையைப் பின்பற்றினால் விவசாயிகள் தீவனச் சோளப் பயிரில் உள்ள சயனைட் நச்சுவின் தாக்கத்தில் இருந்து தங்கள் கால்நடைகளை காப்பாற்றிக் கொள்ளலாம்.

மழையில்லாத காலங்களிலும், அதிக வெயிலும் இருக்கும் பொழுது, தீவனச் சோளப்பயிர்களின் இலைகள் சுருங்கி, வாடிவதங்கும் தருணங்களில் சயனைட் நச்சின் அளவு தீவனச்சோளப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்படிப்பட்ட தீவனச்சோளப் பயிர்களை சாப்பிட்ட கால்நடைகள் உடனடியாக இறந்து விடுகின்றன. பொதுவாக இளம் தளிர்களில் சயனைட் நச்சின் அளவு மிகவும் அதிக அளவில் இருக்கும். ஆதிகநைட்ரேட் உரமிட்டு வளர்த்த தீவனச் சோளப்பயிர்களின் சயனைட் நச்சின் அளவு அதிக அளவில் இருக்கும்.

உதாரணமாக 50 செ.மீ உயரத்திற்குக்குறைவான அளவு வளர்ந்துள்ளசோளப் பயிர்களில் சயனைட் நச்சின் அளவு அதிக அளவில் இருக்கும்.

தீவனச் சோளப் பயிர்களின் இலைகளில் தண்டுகளை விட சயனைட் நச்சின் அளவு அதிக அளவில் இருக்கும். எனவே,விவசாயிகள், மூன்றடி உயரத்திற்கும் அதிகமாக வளர்ந்த, 50, 60 நாட்கள் வளர்ந்து பூத்துக்கதிர் வரும் நிலையில், நைட்ரேட் உரத்தை அதிகம் பயன்படுத்தாது வளர்த்த தீவனச்சோளப் பயிர்களை அறுவடை செய்து தண்டுகளுடன் இலைகளையும் சேர்த்து சிறு, சிறு துண்டுகளாக
நறுக்கிப் பின்பு 4 -5 மணி நேரம் காற்றில் உலரவைத்துக் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு உண்ணக் கொடுப்பதன் மூலம் தீவனச்சோளப் பயிர்களில் சயனைட் நச்சின் தாக்கத்திலிருந்து உங்களுடைய கால்நடைகளைக் காத்துக் கொள்ளலாம்.

வறட்சிக்காலங்களில் வாடிய சோளப் பயிர்களையும், வறட்சியைத் தொடர்ந்து மழைப் பொழிவிற்குப் பின் தழைத்து வரும் இளம் சோளப் பயிர்களையும் மாடுகளுக்கு உண்ணக்கொடுக்கக் கூடாது.

பசுந்தீவனப் பற்றாக்குறை இருக்கும் போது கூட இளந்தீவனச் சோளப்பயிர்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!