விசுவகுடி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத் துவங்கியது

மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

schedule
2015-10-08 | 14:29h
update
2026-03-28 | 02:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே, கல்லாற்றின் குறுக்கே பொதுப் பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகிய மலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் விசுவகுடி அணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:

இந்த நீர்த்தேக்கம் மூலம் கல்லாற்று நீர் வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல்கட்ட பணியாக ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் கூடிய கட்டுமானப்பணிகள் நடந்துவருகிறது.

இந்த அணைக்கட்டு மூலம் 30.67 மில்லியன் கன அடி தண்ணீரை 10 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இதற்காக அணையின் நீர்ப்போக்கியை அமைத்திட 11 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட்டால் ஆன பலமான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்போக்கியின் இருபுறமும், மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு மண்அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கும் பணிகள் முடிவுற்றது.

Advertisement

நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்காக 2 -ம் கட்டமாக மறு மதிப்பீட்டின்படி ரூ. 14.07 கோடி நிதி பெறப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதிபெறும். மேலும் மதகுகளின் மூலம் வெங்கலம் பெரிய ஏரிக்கு கீழுள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கான நீராதாரம் உறுதி செய்யப்படும்.

நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். இந்த அணையை அன்னமங்கலம் வழியாக நேரில் வந்து பார்ப்பதற்காக விசுவக்குடியிலிருந்து 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டுவருகிறது. அணையின் திட்டப்பணிகளின்படி தேக்கப்படவுள்ள 30.67 மில்லியன் கன அடி நீருடன், உட்பகுதியில் ஆழப்படுத்துவதன் மூலம் மேலும் 10 மில்லியன் கன அடி நீரை சேமிக்க மாவட்ட ஆட்சியர் சமச்சீர் வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக இந்த அணையை உருவாக்கும் வகையில் அணையின் முன்புறத்தில் பிரமாண்ட பூங்காவும், அணையின் கரையில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அமைக்கவும், அணையைப்பார்க்க பொது மக்கள் வரும் வகையில் தொண்டமாந்துறை வழியாக புதிதாக ஒருசாலை அமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் 1449.41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அப்போது பொதுப்பணித்துறை நீர்வள உதவிப் பொறியாளர் கார்த்திக் உடனிருந்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.03.2026 - 02:13:10
Privacy-Data & cookie usage: