agri gdp பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தயார் நிலை பதிவேட்டில் பதிந்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் கு. வரதராசன் பேசியதாவது:

பூலாம்பாடி கிழக்குப் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த இடத்துக்கு அருகே வீடற்ற நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வீடு கட்டித்தர வேண்டும்.

பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த 2 கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் தங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் பேசியது:

வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி நீர்த்தேக்க திட்டத்தை விரைவாக முடித்து விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கொட்டரை நீர்த்தேக்க திட்டத்துக்கு நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி, 4 மடங்கு விலை கொடுக்க வேண்டும்.

கரும்பு, நெல் சாகுபடி செய்வோர் பயன்பெறும் வகையில் பகலில் 8 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் விநியோகிக்க வேண்டும். வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று பேசினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என். செல்லதுரை பேசியது:

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள எரிவாயு தகன மேடை, பெருமத்தூர் கால்நடை மருத்துவமனை, சாத்தனூர் கல்மர பூங்கா அருகே கட்டப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டடங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜார்ஜ் வாய்க்காலை தூர் வார நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் 8 ஏரிகள் பயன்பெறும். எனவே, அந்த வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும். பெருமத்தூர் பால் பண்ணையில் கொள்முதல் செய்யப்படும் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த ஒரு மாதமாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜூ பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பால் கொள்முதல் நிலையங்களிலும் உற்பத்தியாளர்கள் கொண்டு செல்லும் பாலை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். கை.களத்தூர் ஏரியை சீரமைத்து, மழைக்காலத்தில் நீரை தேக்கி வைக்க மதகுகளையும், இந்த கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தையும் சீரமைக்க வேண்டும். மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நலன்கருதி பெரம்பலூர்- கை.களத்தூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் பேசியதாவது:

விவசாயிகள் பாசன மின் இணைப்புக்காக தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், இதுவரை மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிக்கப் படுகின்றனர். எனவே, உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சி அளித்தாலும், மின் கம்பிகள் தாழ்வான பகுதியில் செல்வதால் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் மோதி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்க, மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து பயிர் பாதுகாப்பு குறித்த கையேட்டினை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன்,
கூட்டத்தில், வேளாண்மைதுறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, பால்வளத் துறை அதிகாரிகள் உள்பட விவசாயிகள் சங்க பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பயிர் பாதுகப்பிற்கான கையேடு வெளியிடப்பட்டது.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!