விவசாயிக்கு தனிப்பட்டா வழங்காத அரியலூர் வட்டாட்சியருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் : பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

schedule
2015-08-14 | 17:08h
update
2026-06-05 | 17:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்த விவசாயிக்கு பட்டா வழங்காமல் அலைக்கழித்த அரியலூர் வட்டாட்சியர் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமானூர் ஒன்றியம், சுள்ளங்குடி அருகேயுள்ள பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (48) விவசாயி. இவர், தனது பெயரில் உள்ள கூட்டுப் பட்டாவை உட்பிரிவு செய்து தனிப்பட்டாவாக வழங்குமாறு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2.4.2014 ஆம் தேதி மனு அளித்து, அதற்குரிய அரசு கட்டணத்தையும் செலுத்தியிருந்தார்.

Advertisement

ஆனால், அரியலூர் வட்டாட்சியர் உரியகாலத்தில் சிதம்பரத்தின் நிலத்தை உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்காமல் பல மாதங்களாக அலைக்கழித்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் 26.5.2014 ஆம் தேதி மேல்முறையீடு செய்தும் பலனில்லையாம்.

இதனைத் தொடர்ந்து, அரியலூர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் செயல்பாட்டில் சேவை குறைபாடு உள்ளதாகக்கூறி, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற தலைவர் கலியமூர்த்தி, நீதிமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், தனிப்பட்டா வழங்காமல் அலைக் கழிக்கப்பட்டதோடு, மன உளைச்சலுக்கு ஆளான சிதம்பரத்துக்கு அரியலூர் வட்டாட்சியர் ரூ. 10 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ. 2 ஆயிரமும் வழங்குவதோடு, கூட்டுப்பட்டாவை உட்பிரிவு செய்து 2 மாதத்திற்குள் தனிப்பட்டா வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 17:54:20
Privacy-Data & cookie usage: