வேப்பந்தட்டை பகுதியில் பருவமழை பெய்ததில் விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் 12 அடி நீர் தேங்கியது.

schedule
2015-10-15 | 09:48h
update
2026-05-01 | 08:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் தற்போது பெய்த பருவமழையினால் விசுவகுடி நீர்த்தேக்கத்தில் 12 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை செயற்பொறியாளர் தெய்வீகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடியில் கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகிய மலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்த பணி தற்போது 80 சதவீதம் முடிந்துள்ளது.

இந்த நீர்த்தேக்கம் மூலம் கல்லாற்று நீர் வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல்கட்ட பணியாக ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் கூடிய கட்டுமானப்பணிகள் நடந்துள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் 30.67 மில்லியன் கன அடி தண்ணீரை 10 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இதற்காக நீர்போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு மண்அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கும் பணிகள் முடிக்கபட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் வேப்பந்தட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த பருவமழையினால் கல்லாற்றில் வந்த நீர் நீர்த்தேக்கத்தில் தேங்கியது. அந்த வகையில் தற்போது 34 அடி உயரம் கொண்ட நீர்த்தேக்கத்தில் 12 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது. இதனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெய்வீகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வரும் காலங்களில் படிப்படியாக நீர்தேக்கி வைப்பதற்கான ஆலோசணைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவிப்பொறியாளர் கார்த்திக், விவசாய சங்கத்தலைவர் ராமராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது அணையில் நீர் தேங்கியுள்ளதால் அதனை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர். அணையிலிருந்து அன்னமங்கலம் சாலை வரையுள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமாக உள்ளதால் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 08:32:58
Privacy-Data & cookie usage: