20150922_ex service_man
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இராணுவத்தில் பணியாற்றும் ஆர்வத்தையும், அதற்கான உடற்தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் சிறப்பு முகாம்களை படைவீரர்கள் நடத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வேண்டுகோள் விடுத்தார்.

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் படைவீரர்கள் வசித்து வருகிறீர்கள். நமது நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது என்பது எத்தகைய உயரிய பணி, அற்பணிப்பு மிக்க பணி என்பதை உங்கள் பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்.

உங்களின் அனுபவங்களை, நாட்டிற்காக நீங்கள் பணியாற்றியதால் உங்களுக்கு ஏற்பட்ட ஆத்ம திருப்தியை அவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அதுமட்டுமல்ல ராணுவத்தில் பணிபுரிய எத்தகைய உடற்தகுதி வேண்டும், அந்த உடற்தகுதியைப் பெற என்னென்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்க வேண்டும்.

இதற்கென்று உங்கள் பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் ஒன்றை நடத்த வேண்டும். அவ்வாறு முகாம் நடதத உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுவதால் இராணுவத்தில் சேர்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம்களில் நமது மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான இளைஞர்கள் தேர்வாவதற்கு உங்களின் இந்தப் பணி பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறுநீரக சுத்திகரிப்பு கருவிகள் உள்ளது. எனவே உங்களுக்கு ஏதேனும் சிறுநீரகக் கோளாறுகள் இருந்தால் நமது அரசு தலைமை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என பேசினார்.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் இளங்கோ தெருவைச் சேர்ந்த சத்தியசீலன் என்ற முன்னாள் ராணுவ வீரர் இயற்கை மரணம் அடைந்ததையொட்டி அவரது மனைவி ராசாமணியிடம் ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.5000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் செந்தில்குமார், நல அமைப்பாளர் சேதுமாதவராமன் உள்ளிட்ட அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!