சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் நாகலிங்கம் மகன்
கண்ணா(57). சினிமா திரைப்பட இயக்குனரான இவர் நெஞ்சை தொட்டு சொல்லு படம் உட்பட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த இவர் நேற்று மதியம் சென்னையிலிருந்து ஒரு அம்பாசிடர் காரில் நண்பர்களான விஜயகுமார்(40), சுரேஷ்குமார்(45) ஆகியோருடன் புறப்பட்டு, ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, இன்று மாலை அதே காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கார் பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை சுங்க வாவடியை கடந்து செல்ல முயன்ற போது, சென்னை மார்க்கத்திலிருந்து, மீன் லோடு ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த மினி கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் கட்டையில் ஏறி எதிர் திசையில் இறங்கி போது இயக்குனர் கண்ணா சென்ற கார் மீது மோதி கவிழந்தது.
விபத்துக்குள்ளான காரில் கண்ணா, விஜயகுமார், சுரேஷ்குமார் ஆகிய மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த மங்களமேடு போலீசார் தீயணைப்புதுறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலே கண்ணாவும், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் விஜயகுமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் என மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். இதனிடையே விபத்துக்கு காரணமான மினி கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.
இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.