வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-12-16 | 15:04h
update
2023-12-16 | 15:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mature Tamil scholars can apply for scholarship; Perambalur Collector Information!

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமைக் காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப் பெறுகிறது.

தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.

Advertisement

தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாரிசுதாரருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என வழங்கப்படுகிறது.

தமிழாய்ந்த தமிழ்மகனின் தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1,234 வயது முதிர்ந்த தமிழறிஞர்களும், வாரிசுதாரர்கள் 70 பேருக்கும் தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2023-2024ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2023 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை / உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர்க் கூறியதுபோல், மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை (2 படிகள்) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 28.12.2023க்குள் அளிக்கப்பட வேண்டுமெனவும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 01:43:46
Privacy-Data & cookie usage: