பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் தேசீய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர், புத்தமதத்தினர் மற்றும் பார்சி மதங்களைச் சார்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை இரண்டு தவணைகளில் 11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும் – மற்றும் 12-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித் தொகை, கல்விக் கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 1707 சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதிகள் :

இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவியர்கள் 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நடப்பாண்டில் 2015-2016-ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு பயில்பவராக இருத்தல் வேண்டும். சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ஒரு இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். (வருமானச் சான்றிதழ், ஓய்வூதியம் ஆணை ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் (Affidavit) அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும்). மாணவியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் (Affidavit) மற்றும் இதர விவரங்களை என்ற இணையதளத்திலிருந்து படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

கல்வி நிலைய தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், தங்கள் கல்வி நிலையத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்பப்படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2ல் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக The Secretary, Maulana Azad Education Foundation (Ministry of Minority Affairs, Government of India). Chelms Ford Road, New Delhi-110 055 என்கிற முகவரிக்கு 30.9.2015 மாலை 5.00 மணிக்குள் சேரும் வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2015-2016-ஆம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்கள், என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு உதவித்தொகை பெற அம்மாணவிகள் 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்களை உடன் மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தொடர்புடைய கல்வி நிலையங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. எனவே நடப்பாண்டிற்கு உரிய காலகெடுவிற்குள் சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!