16.36 lakh worth welfare assistance at Mandapam Sri Lankan Tamil Rehabilitation Camp: Minister Rajakannappan

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு உட்பட முகாமில் உள்ளவர்களுக்கு ரூபாய் 16.36லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதாவது: டாக்டர் கலைஞர் இலங்கைத் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதனை பின்பற்றி தமிழக முதலமைச்சர் தளபதியார் இலங்கை தமிழர்கள் அனைவரும் நமது தொப்புள்கொடி உறவுகள் என்ற உணர்வில் அவர்கள் நலனுக்காகவும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் நோக்கிலும் தமிழகம் முழுவதிலும் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 457 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் 63 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு 446 பயனாளிகளுக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ் 1965 பயனாளிகளுக்கு ரூபாய் 16 லட்சத்து 35 ஆயிரத்து 959 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சாமானிய ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய துறைகள் போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகிய இரண்டு துறைகள் ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள பெண்களுக்கு இலவச பயண திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கனமழை ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பாராட்டுகின்ற வகையில் பிற மாநில முதலமைச்சர்களுக்கு முன்னோடியாக தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பேசினார்.
போக்குவரத்து துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 6 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் சிவகுமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!