2026 தேர்தல் விதிமுறைகள்: பெரம்பலூர், குன்னம் எம்.எல்.ஏக்கள் அலுவலகத்திற்கு பூட்டு! பறக்கும் படையினர் புறப்பட்டனர்!

schedule
2026-03-15 | 15:37h
update
2026-03-15 | 15:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2026 Election Regulations: Offices of Perambalur and Kunnam MLAs Locked! Flying Squads Mobilized!

தமிழ்நாட்டில், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ருமான ந.மிருணாளினி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room), பறக்கும் படை (FST), நிலையான கண்காணிப்புக் குழு (SST), வீடியோ கண்காணிப்புக் குழு (VST) மற்றும் வீடியோ குழுக்களில் (VVT) நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் 07.03.2026 அன்றே நடத்தப்பட்டது.

Advertisement

கட்டுப்பாட்டு அறை, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள், வீடியோ கண்காணிப்பு குழு,ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றளிப்பு குழுக்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு என்னென்ன பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் எவ்வாறு தேர்தல் பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 147.பெரம்பலூர் (தனி) மற்றும் 148 குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும்படையில் தலா 9 குழுக்கள் வீதம் 18 குழுக்களும், நிலையான கண்காணிப்பு குழுவில் தலா 9 குழுக்கள் வீதம் 18 குழுக்களும் என மொத்தம் 36 குழுக்கள் இடம்பெற்றுள்ளன. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர் நிலையிலான அலுவலர், உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர் நிலையிலான காவலர் மற்றும் 2 காவலர்களும், ஒரு ஒளிப்பதிவாளரும் இடம்பெறுவர்.

வீடியோ கண்காணிப்புக்குழுவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு குழுக்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 18005994402 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-225702, 04328-225703, 04328-225704, 04328-225706 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் c VIGIL என்ற மொபைல் செயலி மூலமும் புகார் அளிக்கலாம்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். கைப்பற்றுகை செய்யப்பட்ட ரொக்கம் / பொருட்கள் தொடர்பாக FIR வழக்கு பதிவு செய்யப்படாத இனங்களில் அவற்றை உரிமைதாரர்களிடம் திரும்ப வழங்கிடுவதற்காக மாவட்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தானே முன்வந்து விசாரணை செய்து உரிய ஆதாரங்களை உரிமையாளர் சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக விடுவித்து உத்தரவிடும், என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, உதவி மாவட்ட தேர்தல் அலுவலரும், டி.ஆர்.ஓ-வுமான கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆர்.டி.ஓ அனிதா (பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்), தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) அருளானந்தம், பெரம்பலூர் பாலசுப்பிரமணியன், குன்னம் சின்னதுரை உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 12:15:46
Privacy-Data & cookie usage: