மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 374 மனுக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது நேரிடையாக அளித்தனர்.

பொதுமக்களிடம் கனிவுடன் பேசி அவர்களிடமிருந்து மனுக்களை நேரிடையாக பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

இன்றையக்கூட்டத்தில் புதுவாழ்வுத்திட்டத்தின் வாயிலாக சிறப்பாக செயல்பட்டு வரும் 101 ஒத்த தொழில் குழுக்களுக்கு உள்கட்டமைப்பு நிதியாக ஏற்கனவே ஒரு குழுவிற்கு ரூ.1 இலட்சம் வீதம் 77 குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது மீதமுள்ள 23 ஒத்த குழுக்களுக்கு உள்கட்டமைப்பு நிதியாக ரூ.21,85,000 க்கான காசோலைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!