பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள் இன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்கடவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும், மாதம் தோறும் காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறதாம். இதற்கு அமைச்சு கண்காணிப்பாளர், அமைச்சு பணியாளர்கள் குறிப்பிட்ட தேதியில் பில் தயார் செய்து வழங்கப்படாததே காரணம் எனத்தெரிகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்துக்கான ஊதியம் வியாழக்கிழமை வரை வழங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுப்பட்டு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சசிகலாவை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, இனிவரும் மாதங்களில் காலதமதமின்றி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.