பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறையின் நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலம் 551 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குநர் (பொ) அய்யாசாமி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வேளாண்மைத் துறையின் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் கடந்த 21 ஆம் தேதி முதல் 18 கிராமங்களுக்கு சென்று மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மண் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை, 1,022 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 551 விவசாயிகளுக்கு மண் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பயிர் சாகுடி மேற்கொள்வதற்கு முன், மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து சாகுபடி மேற்கொள்வதன் மூலம் பயிருக்கு தேவையான அளவு உரத்தை மட்டும் இட்டு சாகுபடி செலவை குறைக்க வாய்ப்பு உள்ளது.
குன்னம் வட்டம் துங்கபுரம் கிராமத்தில் வியாழக்கிழமையும் (ஜூன் 11), பெருமத்தூரில் 12 ஆம் தேதி, கீழப்புலியூர் அத்தியூர் மற்றும் அத்தியூர் குடிகாடு ஆகிய பகுதிகளில் 13 ஆம் தேதியும் மண் மாதிரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களது வயலில் மண் மாதிரிகள் சேகரித்து கட்டணமாக ரூ. 20 செலுத்தி மண் ஆய்வு செய்து, அதன்படி உரங்கள் இட்டு சாகுபடி மேற்கொண்டு அதிக லாபம் பெற்று பயனடையலாம்.