85.39% Voter Turnout in Perambalur and Kunnam Assembly Constituencies; Ballot Boxes Locked and Sealed Under Three-Tier Security!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான, ந. மிருணாளினி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் நேகா பன்சால், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அமர் பகதூர் சிங், சம்பந்தப்பட்ட தொகுதகிளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள், அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் இன்று வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளி 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 24 பேரும், இரண்டாவது அடுக்கில், மாநில ஆயுத காவல் படையினர் 30 நபர்களும், 3வது அடுக்கில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் 147 நபர்களும் என 201 காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்கள் பார்ப்பதற்காக வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் தனி அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் எஸ்.பி பிரபாகர், மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா (பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்), அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.