A photo exhibition on the occasion of Pongal in Perambalur to highlight the achievements of the government: Collector Information!

செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்படவுள்ள புகைப்படக் கண்காட்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
அதில் கலெக்டர் தெரிவித்ததாவது:

”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் 13.01.2023 முதல் 22.01.2023 வரை நடத்த அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள், சிறப்புத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், பயனாளிகளின் புகைப்படங்கள் இடம்பெறும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில் 13.01.203 அன்று பாலக்கரைக்கு அருகில் உள்ள பகுதியில் இந்நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையுடன் மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்டு ”தெருவோர உணவகம்” அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடத்தப்படவுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தினை நகாராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுத்தம் செய்திடவும், கண்காட்சியினை பார்வையிட வருகைதரும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் , கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையின் சார்பில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஒரு குழுவினரை கண்காட்சி துவங்கும் நாள் முதல் முடியும் நாள் வரை இருக்கும் வகையில் அறிவுறுத்த வேண்டும். காவல்துறையினர் அரங்கு அமையவுள்ள இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், என தெரிவித்தார்.

காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், நகராட்சி ஆணையர் (பொ) ராதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை இணை இயக்குநர் ச.கருணாநிதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!