Agricultural machinery and implements at subsidized rates to farmers in Perambalur district
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள தகவல்:
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக் குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 2020-21-ஆம் நடப்பு நிதியாண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் வாங்கிடவும் மற்றும் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5.00 இலட்சம், சுழற்கலப்பை (ரோட்டவேட்டர்)க்கு ரூ.50 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.63 ஆயிரம், பவர் டில்லருக்கு ரூ.85 ஆயிரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 இலட்சம் அல்லது அவற்றின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோர் வட்டார அளவில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ. 25 இலட்சம் மதிப்பில் அமைத்திட 40 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 10 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோர் மூலம் ஒவ்வொன்றும் ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில், 40 சதவீதம் (அதிகபட்சமாக ரூ. 60 இலட்சம் வரை) மானிய உதவியுடன் கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் நிறுவப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் 11 டிராக்டர்கள், 3 கொத்துக்கலப்பை, 6 ரோட்டவேட்டர், 1 விசையால் களையெடுக்கும் கருவி வாங்கிக் கொள்ள நடப்பாண்டில் ரூ. 60.39 இலட்சங்களும், 1 வாடகை மையம் அமைக்க ரூ. 10 இலட்சங்களும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து www.agrimachinery.nic.in ன் மூலம் Direct Benefit Transfer (DBT)- வழிமுறைகளின் படி மானியம்பெறலாம். தனிப்பட்ட விவசாயிகளுக்குரிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டார வாரியான இலக்கு வருகின்ற 21.08.2020 தேதியில் “www.agrimachinery.nic.in”என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உளளது.
இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகி மேலும் விவரங்களைப் பெற்று இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.