Agricultural products can be stored and sold in the regular sales hall: Perambalur Collector!
பெரம்பலூர் விற்பனைக்குழு கட்டுப்பாடின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அறிக்கையிடப்பட்ட வேளாண் விளைபொருட்களான நெல், உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மஞ்சள், வெல்லம், முந்திரி, தேங்காய், மிளகாய், மல்லி, மரவள்ளி, புகையிலை மற்றும் இதர விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலை பெற கிட்டங்கிகள் மற்றும் உலர் கள வசதிகள் உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு மறைமுக ஏலம் மூலம் தங்கள் விளைபொருள்களின் தரத்திற்கேற்ப அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்புள்ளது. விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு தரகு மற்றும் கமிஷன் பிடித்தம் ஏதுமின்றி முழுமையாக நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சரியான எடை, உடனடி பணப் பட்டுவாடா, பொருளீட்டுக்கடன் வசதி. குளிர்பதன வசதி, உழவர் நல நிதித்திட்டம் ஆகிய வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதியும், விளைபொருளை உலர்த்துவதற்கு உலர்கள வசதியும் உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சமாக 180 நாட்களுக்கு தங்களது விளைபொருளை கிட்டங்கியில் சேமிக்க இயலும். இதில் முதல் 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் வசூல் செய்யப்படுவதில்லை. மீதமுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவிண்டாலுக்கு 10 பைசா வீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்படுகிறது.
மேலும் விளைபொருளை கிட்டங்கியில் இருப்பு வைக்கும் நிலையில் விவசாயிகளின் அவசர பணத்தேவைகளுக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.3.00 இலட்சம் வீதம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த வட்டியாக 5% வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. பொருளீட்டுக்கடன் இருப்பு வைத்த முதல் 15 நாட்களுக்கு எவ்வித வட்டியும் இல்லாத சலுகை வழங்கப்படுகிறது.
விவசாயிகள் ஒரு வருடத்தில் ஒரு மெ.டன் அளவு விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்திருந்தால் உழவர் நலத்திட்டத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள். இவர்கள் விபத்து மற்றும் பாம்புகடியால் இறந்து விட்டால் ஒரு இலட்சம் இழப்பீடாக வழங்கப்படும். காப்பீடு பிரிமியத் தொகையை துறையே ஏற்கிறது.
மேலும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 25 மெ.டன் கொள்ளளவில் குளிர்பதன கிடங்கு உள்ளது. அரசு விதிகளின்படி வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆதலால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்று பயனடையலாம் என கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.