All taxes on petrol and diesel should be canceled! PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு முறையே 18 மற்றும் 23 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.61 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதை மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 12-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 14-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், எரிபொருள் விலைகளை உயர்த்தாத எண்ணெய் நிறுவனங்கள், இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வை விட அதிகமாக எரிபொருள் விலைகளை உயர்த்தி வருகிறது. கர்நாடகத்தில் பாரதிய ஜனதா அரசியல் லாபம் தேடுவதற்காக விவசாயிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பெட்ரோல், டீசல் விலைகளை, மத்திய ஆட்சியாளர்கள் விருப்பம் போல மாற்றியமைப்பது மிகப்பெரிய துரோகம் ஆகும்.

எரிபொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 10 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12.15 ரூபாயும், டீசல் விலை ரூ.13.66 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.1.36 வீதம் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். பெட்ரோல் என்பது வாகன எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், டீசல் என்பது விவசாயம், மீன்பிடி, மின்சார உற்பத்தி போன்ற வாழ்வாதாரம் சார்ந்தவற்றுக்காகவும் பயன்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது டீசல் விலையை உலகச் சந்தையுடன் இணைத்து கண்மூடித்தனமாக உயர்த்துவது ஊரக பொருளாதாரத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும்.

பெட்ரோல், டீசல் அடக்க விலையை விட 150 விழுக்காட்டுக்கும் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி வரியாக வசூலிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் மறைமுகவரி வருவாயில் பெரும்பகுதி எரிபொருட்கள் மீதான வரிகளில் இருந்து தான் கிடைக்கிறது. உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் இப்படி ஒரு பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையே தவறாகும். அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்ட பெட்ரோல், டீசல் மீது அளவுக்கு அதிகமாக வரிகள் விதிக்கும் கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இப்போதைய வரு விகிதங்கள் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.150 என்ற உச்சத்தை எட்டக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்துவிடும். அது நல்லதல்ல. 2008-09 ஆம் ஆண்டில் இப்படி ஒரு நிலை ஏற்பட்ட போது, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி, கலால்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரியும் பல மாநிலங்களில் குறைக்கப்பட்டது. இப்போதும் அதேபோல எரிபொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து ஏழை – நடுத்தர மக்களை காப்பாற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்

Tags:

Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!