AMMA moving Ration Stores; Perambalur Collector V. Santha flagged off the event.

பெரம்பலூர் கலெக்டர் ஆபிசில் , கலெக்டர் வே.சாந்தா,பெரம்பலூர்  எம்.எல்.ஏ இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 202 முழு நேர நியாய விலைக் கடைகளும், 80 பகுதி நேர நியாய விலைக் கடைகளும், (இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழகத்தின் நியாய விலைக் கடையையும், மகளிர் அமைப்புகளின் மூலம் இயங்கும் ஒரு நியாய விலைக் கடையும் அடங்கும்) என 282 பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளின் மூலம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 213 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 24.02.2014 அன்று நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அதனால், மக்கள் எளிதில் அணுக இயலாத பகுதிகள், மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பட்டு வந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், அவர்களின் அன்றாட தேவையான உணவு வகைகளை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் பொருட்டு, இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் விதமாக சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மார்ச். 20 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின்போது 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பினை வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக 21.09.2020 அன்று அம்மா நகரும் நியாய விலைக் கடை விற்பனையை துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 17 கூட்டுறவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமங்கலம், அரும்பாவூர், புதுவிராலிப்பட்டி, புதூர், தேனூர், இரூர், தொண்டைமாந்துறை, பூலாம்பாடி, லாடபுரம், அம்மாபாளையம்-1,2, அடைக்கம்பட்டி, அரசலூர், வி.களத்தூர், எசனை, டி.கீரனூர், மேலமாத்தூர், அகரம்சிகூர், ஆதனூர், புதுவேட்டக்குடி ஆகிய 20 கடைகளின் வாயிலாக 3502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.  

அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் மூலம் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு கீழ் உள்ள கடைகளில் பிரதி மாதம் முதல் சனிக்கிழமை அன்றும், 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகளில் பிரதி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என இரண்டு நாட்களிலும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.  விநியோகம் செய்யும் பணியினை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளர்களே விற்பனை பணியை மேற்கொள்வார்கள்.  அக்கடையில் பயன்படுத்தப்பட்ட விற்பனை முனைய கருவி (POS Machine) மற்றும் எடை போடும் தராசு ஆகியவையே பயன்படுத்தப்படும்.  தமிழக அரசால் பொதுமக்களின் நலன் கருதியும், மற்றும் கால விரயத்தை தடுக்கும் நோக்கிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் த.செல்வகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி, துணை பதிவாளர்கள் செல்வராஜ், பாண்டிதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!