arumbavur If spill near the gas cylinder fire burning three houses
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே எரிவாயு சிலிண்டர் கசிவினால் மூன்று வீடுகள் வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம், 3 பவுன் தங்க நகை உட்பட ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெருமாள் வீட்டினுள் சமையல் அறையில் உள்ள மின் விளக்கு சுவிட்சை ஆன் செய்த போது இருந்த எரிவாயு சிலிண்டர் கசிவினால் திடீரென தீ பிடித்துள்ளது. இந்த விபத்தில் தீ மேலும் பரவி பெருமாள் கூரை வீடும், அடுத்தடுத்து அவரது சகோதரர்கள் முருகேசன் மற்றும் சேகர் ஆகியோரது கூரை வீடும் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இந்த தீ விபத்து பற்றி அறிந்த மூவரது குடும்பத்தாரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து காயங்கள் ஏதுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனிடையே மூவரது வீட்டினுள் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம், 3 பவுன் தங்க நகை மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், உடைகள் மற்றும் சொத்து பத்திரங்கள், குடும்ப அட்டைஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏராளமானபொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
தீ விபத்து பற்றி தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
மேலும் இதுகுறித்து மலையாளப்பட்டி வி.ஏ.ஓ.,சுதாகர் மூலம் தகவலறிந்த வேப்பந்தட்டை வட்டாச்சியர் மனோன்மணி மற்றும் வருவாய்த்துறையினர் மலையாளப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வேஷ்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணை, பணம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.