Asian countries, stalked Storm: Tamil Nadu, will it be ready?

file Copy


கடந்த வாரத்தில் ஆசியாவில் பிலிப்பைன்ஸ், மக்காவ், ஹாங்காங், சீன நாடுகளை மங்கூட் பெரும்புயலும் அமெரிக்காவை புளோரன்ஸ் சூறாவளியும் தாக்கியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கையின் போக்கு பெருமளவு மாறி உள்ளதையும், இயற்கை சீற்றங்களின் தாக்குதல் வலிமை பன்மடங்கு அதிகரித்து வருவதையும் இந்த பேரிடர்கள் மெய்ப்பிக்கின்றன.

பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டின் காரணமாக வளிமண்டலத்தில் கலக்கவிடப்பட்ட கரியமிலவாயு பூமியின் வெப்பநிலையை அதிகமாக்கியிருக்கிறது. இதனால் கடல்மட்டம் அதிகரித்துள்ளதுடன், கடல்நீரின் வெப்பமும் அதிகரித்து காற்றில் நீராவி அதிகமாகிறது. வெப்பமும் நீராவியும் அதிகமாவதால் – அது புயலின் வேகத்தையும், மழைப்பொழிவு அளவையும் அதிகமாக்குகிறது! இதனால், புயலின் வலிமை சுமார் 33% அளவுக்கு அதிகரிப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்!

அமெரிக்காவில் அடித்த புளோரன்ஸ் சூறாவளி மிக மெதுவாக கடந்து சென்றது. அதனால், குறுகிய நேரத்தில் மிக அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தி, வெள்ளபெருக்கை உருவாக்கியது. மறுபுறம் கிழக்காசிய நாடுகளை தாக்கிய மங்கூட் மிக வேக சூறாவளியாக உருவெடுத்து பிலிப்பைன்ஸ், மக்காவ், ஹாங்காங், சீன நாடுகளை புரட்டிப்போட்டது. ஹாங்காங் நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவாக 240 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது!

புயல்கள் தரும் படிப்பினைகள்

கடந்தவார புயல்கள் படிப்பினைகளை விட்டுச்சென்றுள்ளன. அமெரிக்க நாடு அதன் பண வலிமையால் புயலை சமாளித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில் – பாதுகாப்புக்காக பங்கருக்குள் ஒளிந்த 50க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் புதைந்து மாண்டுள்ளனர். எனினும், கடந்த ஆண்டு புயலினை எதிர்கொண்ட அனுபவத்தை வைத்து – உரிய முன்னேற்பாடுகளை செய்து உயிரிழப்புகளை பெருமளவு குறைத்தனர்.

மக்காவ், ஹாங்காங் ஆகிய பகுதிகள் செல்வ செழிப்பில் உள்ள இடம் என்பதால், வலிமையான கட்டமைப்புகள் மூலம் சமாளித்துள்ளனர். தென் சீன பகுதியில் வீசிய இதே புயலை சீன நாடு அதிரடியாக எதிர்கொண்டுள்ளது. ஓரிரு நாட்களில் 30 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி உயிரிழப்பை தவிர்த்துள்ளனர்.

ஆனாலும், மேற்கண்ட அனைத்து நாடுகளிலும் உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை ஓரளவுக்கு மேல் தடுக்க முடியவில்லை. பல்லாயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த இழப்புகளை ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம்!

அதிகரிக்கும் பேராபத்துகள்

இயற்கை சீற்றங்கள் இனி பன்மடங்கு அதிகாமாகிக் கொண்டே செல்லும் என்பதுதான் உலகெங்கும் உள்ள அறிவியலாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. பேராபத்துகளை இனி தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அவற்றின் தாக்கத்தை கணிசமாக குறைக்க முடியும். தாக்குதலை எதிர்கொள்ளும் தகவமைப்பு பணிகளையும் முன்கூட்டியே செய்துகொள்ள முடியும்.

அதற்கு, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை உடனடியாக போர்க்கால அடிப்படையில் குறைக்க வேண்டும். அதே வேகத்தில் வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புகளையும் போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும்.

ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (UNFCCC) அமைப்பின் கீழ், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, உலக நாடுகளுக்கிடையே கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் இந்த ஆண்டாவது உருப்படியான செயல்திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கான ஐநா மாநாடு 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் கூடுகிறது.

(ஐநா ஒப்பந்தம் வெற்றியடைய வேண்டும் என்றால், அதற்கு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையையும் அமெரிக்க நாட்டின் அடாவடியையும் முறியடிக்க வேண்டும்)

அதே நேரத்தில், உலகின் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு நிறுவனமும் தத்தமது அளவில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், எதிர்கொள்ளவும் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு தாங்குமா?

மங்கூட் புயலின் வேகம் 240 கிலோமீட்டர் வரை சென்றுள்ளது. வங்கக்கடலில் இனி உருவாகும் சூறாவளிகள் எல்லாமும் அதிவேகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து உரிய முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்.

அதே போன்று, இனி வரும் புயல்கள் மிகப்பெரிய ‘திடீர் பெருமழை’ சேதத்தையும் கொண்டுவரும். நிலத்தை நெருங்கும் புயல்கள் வேகமாக கடந்து செல்லாமல், ஒரே இடத்தில் நின்று பெருமழையை பொழிவிக்கும். இதையும் எதிர்பார்த்து தமிழ்நாடு அரசு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

“அப்படியான ஒரு தொலைநோக்குள்ள அரசை தமிழக மக்கள் கொண்டிருக்கிறார்களா?” – என்பது நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும், நமது சந்ததியினரின் எதிகாலத்தையும் பாதிக்கப்போகும் கேள்வியாகும்!

இர. அருள், மாநிலச் செயலாளர், பசுமைத் தாயகம். arulgreen1@gmail.com


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!